பிரபல நகைச்சுவை நடிகர் பி.ஜே.காலகர் காலமானார்.. .திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல்!
அயர்லாந்தின் பிரபல நகைச்சுவை நடிகரும் வானொலித் தொகுப்பாளருமான பி.ஜே.காலகர் (51), தனது இல்லத்தில் காலமானார் என அவரது நிர்வாக நிறுவனம் உறுதி செய்துள்ளது. அவரது மறைவுக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பி.ஜே.காலகர் தனது இல்லத்தில் உயிரிழந்ததை அவரது நிர்வாக நிறுவனம் உறுதி செய்த போதிலும், மரணத்திற்கான காரணம் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. இக்கடினமான சூழலில் குடும்பத்தினரின் தனிமைக்கு மதிப்பளிக்குமாறு நிர்வாக நிறுவனம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
'மீட் யுவர் நெய்பர்ஸ்' மற்றும் 'மார்னிங் குளோரி' உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர் பி.ஜே.காலகர். நகைச்சுவை மற்றும் வானொலித் துறையில் முத்திரை பதித்த அவரது மறைவுக்குச் சக கலைஞர்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.