பிரபல ஹாலிவுட் நடிகர் அலெக்சாண்டர் மார்ட்டன் காலமானார்!
ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற நடிகர் அலெக்சாண்டர் மார்ட்டன் உடல்நலக்குறைவு காரணமாக தனது 81 வயதில் காலமானார். 'மொனார்க் ஆஃப் தி கிளென்' என்ற புகழ்பெற்ற தொடரில் வழிகாட்டியாக நடித்து உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். இவரது மறைவு செய்தி ஹாலிவுட் திரையுலகினர் மற்றும் அவரது கோடிக்கணக்கான ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அலெக்சாண்டர் மார்ட்டன் வெறும் குணச்சித்திர நடிகராக மட்டுமின்றி, மிரட்டலான வில்லன் கதாபாத்திரங்களிலும் தனது முத்திரையைப் பதித்தவர். குறிப்பாக 'ஷெட்லேண்ட்' மற்றும் 'கெட் கார்ட்டர்' உள்ளிட்ட ஹாலிவுட் திரைப்படங்களில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு இன்றும் ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. இவரது கம்பீரமான குரலும் தனித்துவமான நடிப்புத் திறனும் இவருக்குத் திரையுலகில் ஒரு நீங்காத இடத்தைப் பெற்றுத் தந்தன.
இவரது மறைவுக்கு ஹாலிவுட் முன்னனி நட்சத்திரங்களும் திரைக்கலைஞர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். ஒரு சிறந்த கலைஞனைத் திரையுலகம் இழந்துவிட்டதாகப் பலரும் பதிவிட்டு வருகின்றனர். முதுமை மற்றும் உடல்நலப் பாதிப்பால் மறைந்த அலெக்சாண்டர் மார்ட்டனின் உடல் அடக்கம் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.