தமிழ்நாட்டில் வாகனங்களுக்கான பேன்சி எண் கட்டணம் உயர்வு.. விஐபி எண்களுக்கு ரூ.8 லட்சம் வரை கட்டணம்!
தமிழகத்தில் தங்களுக்குப் பிடித்தமான விஐபி அல்லது பேன்சி வாகன எண்களை வாங்க விரும்பும் வாகன ஓட்டிகள் இனி கூடுதலாகப் பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் மேற்கொண்டு, பேன்சி எண்களுக்கான கட்டணத்தை 2 முதல் 3 மடங்கு வரை உயர்த்துவதற்கான வரைவு திருத்த அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டிற்குப் பிறகு தற்போதுதான் இந்த பேன்சி எண்களுக்கான கட்டண அமைப்பில் அரசு முழுமையான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
இதுவரை பேன்சி எண்களுக்கு ஒரே சீரான கட்டண முறை அமலில் இருந்த நிலையில், இனிமேல் வாகனங்களின் சந்தை மதிப்பின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. ரூ. 50,000 வரையிலான மதிப்புள்ள சாதாரண இருசக்கர வாகனங்களுக்குப் பேன்சி எண் கட்டணம் ரூ. 2,000 ஆகவும், ரூ. 30 லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள அதிநவீன பிரீமியம் பைக்குகளுக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரையிலும் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் சொகுசு வாகனங்களுக்கான பேன்சி எண்களின் ஆரம்பக் கட்டணம் ரூ. 20,000 (ரூ. 4 லட்சம் வரையிலான மதிப்புள்ள வாகனங்களுக்கு) முதல் அதிகபட்சமாக ரூ. 1.50 லட்சம் (ரூ. 50 லட்சத்திற்கும் அதிக மதிப்புள்ள வாகனங்களுக்கு) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நடைமுறையில் உள்ள எண்களைத் தாண்டி, எதிர்காலத் தொடர்களில் வரும் எண்கள் மற்றும் அரசிடம் முன்பதிவு செய்யப்பட்டுள்ள சிறப்பு விஐபி எண்களைப் பெறுவதற்கான கட்டணங்களும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன.
இதன்படி, அடுத்தடுத்த எதிர்காலத் தொடர் எண்களுக்கான கட்டணங்கள் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளதுடன், 13 மற்றும் 14ஆம் எதிர்காலத் தொடர்களில் உள்ள எண்களைப் பெறுவதற்குப் புதிய பிரீமியம் பிரிவின் கீழ் அதிகபட்சமாக ரூ. 8 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த வரைவு திருத்த அறிவிப்பு தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இப்புதிய விதிமுறைகள் குறித்துப் பொதுமக்கள் தங்களது கருத்துகளையும் ஆட்சேபனைகளையும் தெரிவிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இக்கட்டண உயர்வு அதிகாரப்பூர்வமாக முழு அமலுக்கு வரும் எனப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.