பதறும் ரசிகர்கள்... இந்தியாவுக்காக 3 முறை தங்கம் வென்ற நீரஜ் யாதவ் தற்கொலை!

 

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்காக 3 முறை தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த பிரபல பாரா தடகள வீரர் நீரஜ் யாதவ் (42), டெல்லியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 42 வயதான பாரா ஈட்டி எறிதல் வீரர் (F55 பிரிவு) நீரஜ் யாதவ், நேற்று டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

ஊக்கமருந்து பயன்படுத்தியதாகக் கூறி அவருக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தடை காரணமாகவே அண்மையில் ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியாமல் போனது.

நீரஜ் யாதவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீரஜ் யாதவின் மறைவை இந்திய பாரா தடகள அணியின் தலைமைப் பயிற்சியாளர் எஸ்.சத்யநாராயணா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்துப் பேசிய பயிற்சியாளர் சத்யநாராயணா, "நீரஜ் தற்கொலை செய்து கொண்டது மிகவும் துரதிர்ஷ்டவசமான ஒன்று. விளையாட்டு வீரர்கள் வெற்றியையும் தோல்வியையும் சமமாகப் பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்று தெரியவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்குப் பல பதக்கங்களைப் பெற்றுத் தந்த முன்னணித் தடகள வீரர் ஒருவர் மன உளைச்சல் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் விளையாட்டு வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.