கலெக்டர் முன்பு விஷம் குடித்த விவசாயி... தென்காசியில் பரபரப்பு!

 

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாதந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது, நிலப் பிரச்சனை தொடர்பாகத் தொடரப்பட்ட புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் மனமுடைந்த விவசாயி ஒருவர், அதிகாரிகளின் முன்னிலையிலேயே விஷம் குடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலை 9:30 மணி முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான விவசாயிகள் கூட்ட அரங்கில் காத்திருந்தனர். காலை 11:30 மணி வரை மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை அதிகாரிகள் கூட்டத்திற்கு வராததால் ஆத்திரமடைந்த விவசாயிகள், அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்து கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், பழைய குற்றால அருவிக்கான வனத்துறை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களைப் பகுதி அளவாக அன்றி, முழுமையாக ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஏ.கமல்கிஷோர் கூட்ட அரங்கிற்கு வருகை தந்ததைத் அடுத்து, விவசாயிகள் மீண்டும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது மனுக்களை அளிக்கத் தொடங்கினர். அப்போது தென்காசி அருகே உள்ள பாம்புகோவில்சந்தை பகுதியைச் சேர்ந்த பூவைய்யா என்ற விவசாயி, ஆட்சியரிடம் மனு அளிக்க மேடைக்கு வந்தார். திடீரென அவர் தான் மறைத்து வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து ஆட்சியர் மற்றும் சக அதிகாரிகளின் கண் முன்னாலேயே குடித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் மற்றும் அங்கிருந்த காவல் துறையினர், உடனடியாக அவரை மீட்டுத் தென்காசி அரசு பொது மருத்துவமனைக்கு அவசரச் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்துத் தென்காசி மற்றும் சொக்கம்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  முதற்கட்ட விசாரணையில் விவசாயி பூவைய்யா தனது சொந்த நிலத்தில் வாழை மற்றும் பூக்களைப் பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இவரது நிலத்தில் உள்ள பயிர்களைப் பக்கத்து நிலத்தைச் சேர்ந்த சிலர் திட்டமிட்டுத் தொடர்ச்சியாகச் சேதப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அவர் சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும், உள்ளூர் காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர். இதனால் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, நீதிக்காகப் பல இடங்களுக்கு அலைந்து மனமுடைந்த நிலையிலேயே அவர் இத்தகைய விபரீத முடிவை எடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் போலீசார் இருந்த போதிலும், குறைதீர் கூட்ட அரங்குள்ளேயே விவசாயி விஷப் பாட்டிலுடன் நுழைந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம், மாவட்ட நிர்வாகத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விகளையும், விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.