‘ஆவினுக்கு பால் விநியோகம் நிறுத்தம்' - விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை!

 

தீவனம் மற்றும் கூலி உள்ளிட்ட பால் உற்பத்திச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பால் கொள்முதல் விலையை வெறும் ரூ.1 மட்டும் உயர்த்தியிருப்பது ஏமாற்றம் அளிப்பதாகப் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் தெரிவிப்பதாக அதன் மாநிலத் தலைவர் சின்னசாமி கூறியுள்ளார்.

பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.50-ம், எருமைப்பாலுக்கு லிட்டருக்கு ரூ.60-ம் கொள்முதல் விலையாக ஆவின் நிர்வாகம் வழங்க வேண்டும். முதன்மைப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களுக்கு 5% மார்ஜின் தொகையை ஆவின் நிர்வாகம் வழங்க வேண்டும்.

பால் உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்தாவிட்டால், ஆவின் நிறுவனத்திற்குப் பால் வழங்குவதைப் பூரணமாக நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உற்பத்திச் செலவுக்கு ஏற்ப கொள்முதல் விலை கிடைக்காததால் பால் பண்ணைத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.