பிரம்மாண்ட பேஷன் திருவிழா... மேடையில் அசத்திய மாடல் அழகிகள்!

 

பேஷன் டிசைன் கவுன்சில் ஆப் இந்தியா சார்பில் நாட்டின் மிகப்பிரமாண்டமான ஆடம்பர ஆடை வடிவமைப்பு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. “ஹூண்டாய் இந்தியா குட்டூர் வீக் 2026” என்ற பெயரில் ஒரு வார காலம் இந்த ஆடம்பரப் பேஷன் திருவிழா நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா கடந்த 23ம் தேதி ஐதராபாத்தில் மிகக் கோலாகலமாகத் தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதுடெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில் கடந்த 24ம் தேதி முதல் பேஷன் போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்த விழாவில் இந்தியாவின் முன்னணி ஆடை வடிவமைப்பாளர்களின் பிரத்தியேக ஆடைகளை அணிந்து மாடல் அழகிகள் மேடையில் வலம் வந்தனர். இந்தியப் பாரம்பரியக் கலை நயத்துடன் நவீன மேலைநாட்டு பாணிகள் இணைக்கப்பட்ட ஆடைகள் பார்வையாளர்களைக் பெரிதும் ஈர்த்தன. தருண் தஹிலியானி, ஜேஜே வளாயா, பல்குனி ஷேன் பீகாக் போன்ற ஆடை வடிவமைப்பாளர்களின் படப்புகள் மேடையில் ஒளிரச் செய்யப்பட்டன. பட்டு, வெல்வெட் மற்றும் ஜரிகை வேலைப்பாடுகள் நிறைந்த ஆடைகளை அணிந்து அழகிகள் கம்பீரமாக அன்னநடை பயின்று அசத்தினர்.

 

கண்ணைக் கவரும் மேடை அலங்காரமும், பழங்கால அரசவை பாணி விளக்குகளின் ஒளி அமைப்பும் இந்த நிகழ்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றன. இந்த பிரம்மாண்ட ஆடை அணிவகுப்பைக் காணப் பாலிவுட் பிரபலங்கள், சர்வதேச பேஷன் விமர்சகர்கள் எனப் பலர் நேரில் திரண்டிருந்தனர். டெல்லியில் அரங்கேறி வரும் இந்த திருவிழா வரும் 29-ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற ராகுல் மிஷ்ராவின் வடிவமைப்புடன் நிறைவடைகிறது.