விஜய்க்கு வாக்களிக்க மாட்டார்கள் - அருட்தந்தை சார்லஸ் அதிரடி.. சிறுபான்மையினர் ஆதரவு யாருக்கு?

 

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தான் போட்டியிடும் தொகுதிகளையும் விஜய் உறுதி செய்துள்ளார். இந்நிலையில், விஜய்யின் அரசியல் பிரவேசம் மற்றும் சிறுபான்மையின மக்களின் நிலைப்பாடு குறித்து அருட்தந்தை சார்லஸ் தெரிவித்துள்ள கருத்துக்கள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

விஜய்யின் வேட்பாளர் அறிவிப்பு குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அருட்தந்தை சார்லஸ் கூறுகையில், "கடந்த காலங்களில் தமிழக மக்கள் சந்தித்த நீட் தேர்வு பாதிப்பு, விவசாயிகள் போராட்டம் என எந்தவொரு மக்கள் நலன் சார்ந்த களப் போராட்டங்களிலும் விஜய் நேரடியாகப் பங்கெடுக்கவில்லை. அப்படிப்பட்ட ஒருவருக்குத் தமிழ்நாட்டு மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்?"

விஜய்க்குச் சிறுபான்மையின மக்கள் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள் என்றும், அவர்கள் எப்போதும் தங்களுக்குப் பாதுகாப்பான தலைமையையே தேர்ந்தெடுப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விஜய் தனது கட்சியைக் கலைஞர் மற்றும் அண்ணா போன்ற திராவிடத் தலைவர்களின் பாதையில் கொண்டு செல்லப்போவதாக அறிவித்திருந்தாலும், சிறுபான்மையின வாக்கு வங்கியில் அவர் ஓட்டையைப் போடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், "அவர் ஒருபோதும் திமுகவின் வாக்கு வங்கியைப் பாதிக்க மாட்டார்" என்ற தொனியில் அருட்தந்தை சார்லஸின் இந்த விமர்சனம் அமைந்துள்ளது.

விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளுமே சிறுபான்மையின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளாகும். அங்கு அருட்தந்தை சார்லஸ் போன்றவர்களின் இத்தகைய கருத்துக்கள் விஜய்க்கு ஒரு சவாலாக அமையலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.