குடும்பத் தகராறில் மகனைக் கத்தியால் குத்திக் கொன்ற தந்தை!
ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தந்தை ஒருவரே தனது மகனைக் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் பத்ரக் கிராமப்புற காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுனிதா கிராமத்தில் ரபி சாஹு என்பவர், தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் தந்தை ரபி சாஹுவுக்கும் அவரது மகன் பிகாஷ் சாஹுவுக்கும் இடையே குடும்பத் தகராறு காரணமாக கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த தந்தை ரபி சாஹு தனது மருமகளை வீட்டிற்குள் அடைத்து வைத்துவிட்டு, பிகாஷைக் கூர்மையான கத்தியால் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த பிகாஷ் சாஹு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பிகாஷ் சாஹுவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணையை தொடங்கினர். தந்தை ரபி சாஹுவைக் காவல்துறையினர் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.