FATHER'S DAY: அப்பாவைக் கொண்டாடி மகிழ 5 எளிய அன்பான வழிகள்!
ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று ஜூன் 21ம் தேதி உலகத் தந்தையர் தினம் நாடு முழுவதும் உத்வேகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. எப்போதும் நமக்காக உழைத்துக் கொண்டே இருக்கும் அப்பாக்களுக்கு, விலையுயர்ந்த பரிசுகளை விட நாம் கொடுக்கும் 'தரமான நேரமே' ஆகச்சிறந்த பரிசாகும். இந்தத் தினத்தை உங்கள் தந்தைக்கு மறக்க முடியாத நாளாக மாற்ற இதோ சில எளிய யோசனைகள்.
1. காலை உணவோடு தொடங்கும் சாகச நாள்
இன்றைய பொழுதை உங்கள் தந்தைக்குப் பிடித்தமான சுவையான காலை உணவை நீங்களே தயாரித்து வழங்குவதிலிருந்து தொடங்குங்கள். அவருக்கு இயற்கையான சூழல் பிடிக்கும் என்றால், இன்று அவருடன் ஒரு சிறிய ஹைக்கிங் அல்லது அவர் விரும்பும் இடங்களுக்கு ஒருபயணத்தைத் திட்டமிடுங்கள். மிக முக்கியமாக, இன்று ஒரு நாள் உங்களது செல்போன் மற்றும் லேப்டாப் போன்ற மின்னணுச் சாதனங்களுக்கு முழுமையாக விடுமுறை கொடுத்துவிட்டு, உங்களது முழுக் கவனத்தையும் தந்தையின் மீது மட்டுமே செலுத்துங்கள். இயற்கையின் மடியில் அவருடன் அமர்ந்து பேசுவது அவருக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.
2. கைகளால் உருவான ஆகச்சிறந்த பரிசு
கடைகளில் வாங்கும் பொருட்களை விட, உங்களது சொந்தக் கற்பனையில் உருவாவதே அப்பாவின் இதயத்தைத் தொடும்: உங்கள் தந்தையைப் பற்றிய உங்களது நினைவுகள், எண்ணங்கள் மற்றும் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் கவிதை அல்லது கையால் செய்யப்பட்ட வாழ்த்து அட்டை அல்லது ஒரு அழகான ஸ்கிராப்புக் தயாரித்துக் கொடுக்கலாம்.
உங்களை அவர் பாதுகாப்பாக அரவணைத்த தருணங்கள், ஒரு சிறந்த நண்பராகத் தோள் கொடுத்த நிமிடங்கள் மற்றும் உங்களுக்குள் நடந்த சுவாரசியமான சம்பவங்களைப் பட்டியலிட்டு அவரிடம் வாசித்துக் காட்டுங்கள். இது வரும் நாள்களிலும் உங்களுக்குள் இருக்கும் பிணைப்பை மேலும் பலப்படுத்தும்.
3. உழைப்பிற்கு ஒரு நாள் ஓய்வு
குடும்பப் பொறுப்புகளுக்காகத் தினசரி ஓடி ஓடி உழைக்கும் உங்கள் தந்தைக்கு இன்று வீட்டு வேலைகளில் இருந்து முழுமையான ஓய்வு கொடுங்கள். வயது முதிர்வு மற்றும் உடல் சோர்வைப் போக்கும் வகையில், இன்று வீட்டிலேயே அவருக்கு நீங்களே மென்மையான உடல் மசாஜ் (ஹெட் அல்லது பாடி மசாஜ்) செய்து விடலாம். இது அவரது உடல் வலியைக் குறைப்பதுடன் மனதிற்கும் நிம்மதியைத் தரும்.
4. குடும்பத்துடன் கூடி மகிழும் தருணங்கள்
ஒரு தந்தைக்குத் தனது பிள்ளைகளும், குடும்பமும் ஒன்றாக மகிழ்ச்சியாக இருப்பதை விடப் பெரிய சந்தோஷம் வேறு எதுவுமில்லை: குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உங்களது பால்ய காலக் கதைகள், அப்பா கடந்து வந்த பாதைகள் மற்றும் சுவையான பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். பழைய புகைப்பட ஆல்பங்களை ஒன்றாகப் பார்ப்பது இந்தத் தருணத்தை மேலும் அழகாக்கும்.
5. தடையற்ற உரையாடலின் பேரன்பு
சில நேரங்களில், எவ்வித ஆடம்பரத் திட்டங்களும் இன்றி தங்கு தடையின்றி ஒன்றாக அமர்ந்து பேசுவதே ஆகச்சிறந்த பரிசாகும். மனதுடன் மனது பேசி, அந்தப் பொன்னான தருணங்களை மனதார ரசித்து அப்பாவைக் கொண்டாடுங்கள்!