நீட் மறுதேர்வு எழுத அச்சம்... மாணவி தூக்கிட்டு தற்கொலை!

 

நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு அறிவிக்கப்பட்டதால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் மற்றும் அச்சம் காரணமாக, 18 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அஹன்ஷா (18). இவர் மருத்துவர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் நீட் தேர்விற்காகத் தீவிரமாகப் படித்து வந்தார்.

கடந்த மாதம் 3-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட் பொது நுழைவுத் தேர்வினை மாணவி அஹன்ஷாவும் எழுதியிருந்தார். தேர்வு கடினமாக இருந்தாலும், தனது கடின உழைப்பால் நல்ல மதிப்பெண்களைப் பெற்று, நிச்சயம் மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் அவர் இருந்துள்ளார். 

இதற்கிடையே, நாடு முழுவதும் நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, மத்திய அரசு மற்றும் தேர்வு முகமை அண்மையில் அந்தத் தேர்வினை ரத்து செய்து அதிரடி உத்தரவிட்டது. மேலும், மாணவர்களுக்கு மீண்டும் 'மறுதேர்வு' நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே கடுமையான மன அழுத்தத்துடன் படித்துத் தேர்வு எழுதியிருந்த மாணவி அஹன்ஷாவுக்கு, இந்த அறிவிப்பு பேரிடியாக இறங்கியது. தேர்வு ரத்து செய்யப்பட்டதால் கடந்த சில நாட்களாகவே அவர் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

மீண்டும் முதலிலிருந்து படித்து மறுதேர்வு எழுத வேண்டுமே என்ற அச்சமும், அதில் தம்மால் நல்ல மதிப்பெண் பெற முடியுமா என்ற பயமும் அவரிடம் தொற்றிக்கொண்டது. இந்த நிலையில், நேற்று மன உளைச்சலின் உச்சத்துக்கே சென்ற அஹன்ஷா, தான் தங்கியிருந்த அறையில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மாணவியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், மாணவியின் தற்கொலைக்கு நீட் தேர்வு ரத்து மற்றும் மறுதேர்வு பயம் தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் அழுத்தங்கள் இருந்ததா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சக மருத்துவ ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. தேர்வுகளில் ஏற்படும் பயம் அல்லது மன உளைச்சல் போன்ற சமயங்களில் தங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், தமிழக அரசின் மாநில மனிதவள மேம்பாட்டுத் துறை மற்றும் மனநல உதவி எண்களை (044-24640050, 104) தொடர்புகொண்டு கட்டணமில்லா ஆலோசனை பெறலாம்.