ஒரே பள்ளியைச் சேர்ந்த 150 மாணவர்களுக்கு காய்ச்சல், வாந்தி... பெரும் பரபரப்பு! 

 

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள கொயிலாடி பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படித்து வரும் மாணவர்களில் பலருக்கு கடந்த சில நாட்களாகவே திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு காய்ச்சல் மற்றும் வாந்தி போன்ற பாதிப்புகள் அடுத்தடுத்து தோன்றின. இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர் பாதிக்கப்பட்ட மாணவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போதைய நிலவரப்படி அந்தப் பள்ளியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து பத்தேரி தாலுகா மருத்துவமனையில் மாணவர்களுக்காகவே ஒரு தனிச் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு தகுந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மாணவர்களுடன் சேர்ந்து பள்ளி ஆசிரியர் ஒருவரும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் யாருக்கும் உயிருக்கு ஆபத்தான சூழல் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

மாணவர்களின் உடல்நலனை முன்னிட்டு பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை வழங்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். மாணவர்களின் இந்த திடீர் பாதிப்பிற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், பள்ளியில் வழங்கப்பட்ட உணவு மற்றும் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்