உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தில் பெரும் சோகம்... மூச்சுத்திணறி 3 பேர் பரிதாப பலி!
பிஃபா உலகக் கோப்பை 2026 கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில், எக்குவடோர் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெக்சிகோ அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் கடந்த 1986 ஆம் ஆண்டுக்குப் பிறகு, சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின் மெக்சிகோ அணி முதல்முறையாக உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் பெருவெற்றியைக் கொண்டாடுவதற்காக அந்நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டி வீதிகளில் 10 மில்லியனுக்கும் அதிகமான கால்பந்து ரசிகர்கள் திரண்டனர்.
தலைநகரின் முக்கிய அடையாளமான ‘ஏஞ்சல் ஆஃப் இண்டிபென்டன்ஸ்’ நினைவுச் சின்னம் மற்றும் பாசியோ டி லா ரெபார்மா சாலைப் பகுதிகளில் கட்டுக்கடங்காத அளவில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்று கூடினர். இதனால் அந்தப் பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியதுடன், கடும் நெரிசலும் ஏற்பட்டது. இந்த அதீத கூட்ட நெரிசலில் சிக்கி வெவ்வேறு இடங்களில் 3 பேர் திடீரென மயங்கி விழுந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த அவசர மருத்துவ மீட்புக் குழுவினர், மயக்கமடைந்த அவர்களுக்கு முதலுதவி மற்றும் தீவிர செயற்கை சுவாசச் சிகிச்சைகளை அளித்து உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இருப்பினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 19 வயது இளம் பெண், 44 வயது ஆண் மற்றும் 48 வயது பெண் ஆகிய 3 பேரும் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட கடுமையான மூச்சுத்திணறல் காரணமாகப் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவத்திற்கு மெக்சிகோ சிட்டி மேயர் கிளாரா ப்ருகாடா தனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், கால்பந்து ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் போது எப்போதும் பொறுப்புடனும், பாதுகாப்புடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டும் என்று அவர் சமூக வலைதளங்கள் வாயிலாக உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.