FIFA WC: "தண்ணீர் பாட்டிலில் அர்ஜென்டினாவின் ரகசியம்" - அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து கீப்பரின் மாஸ்டர் பிளான் அம்பலம்!

 

 

அமெரிக்காவின் அட்லாண்டா மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்தை வீழ்த்தி நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா இறுதிப் போட்டிக்குக் கெத்தாக முன்னேறியுள்ளது. இந்தத் தோல்விக்கு மத்தியிலும், இங்கிலாந்து அணியின் கோல் கீப்பர் பிக்ஃபோர்ட் கையாண்ட ஒரு ரகசிய யுக்தி போட்டிக்குப் பிறகு வெளியாகி உலகக் கால்பந்து ரசிகர்களிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து மற்றும் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா மோதிய இந்த அரையிறுதி ஆட்டம் தொடக்கம் முதலே அனல் பறந்தது. ஆட்டத்தின் முற்பாதியில் இங்களைந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று அர்ஜென்டினாவுக்கு முட்டுக்கட்டை போட்டது. ஆனால், ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் இறுதி நிமிடங்களில் கதை அப்படியே தலைகீழாக மாறியது. ஆட்டம் முடிய இன்னும் 5 நிமிடங்களே இருந்த நிலையில் அர்ஜென்டினா அதிரடியாகத் தனது முதல் கோலை அடித்து சமன் செய்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த 7 நிமிட இடைவெளியில் 2-வது கோலையும் அடித்து, 2-1  என்ற கணக்கில் இங்கிலாந்தைக் கதறவிட்டு அர்ஜென்டினா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

ஆட்டம் முடிந்த பிறகு தான், மைதானத்தில் இங்கிலாந்து கோல் கீப்பர் பிக்ஃபோர்ட் செய்திருந்த ஒரு ரகசிய ஏற்பாடு வெளிச்சத்திற்கு வந்தது. ஒருவேளை ஆட்டம் சமனிலையில் முடிந்து 'பெனால்டி ஷூட் அவுட்' முறைக்குச் சென்றால், அதை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான மாஸ்டர் பிளானை அவர் வைத்திருந்தார்.

அர்ஜென்டினா அணியின் முன்னணி வீரர்கள் (மெஸ்ஸி உள்ளிட்டோர்) பெனால்டி கிக் அடிக்கும் போது, பந்தை எந்த திசையை நோக்கி உதைப்பார்கள், அதைத் தடுக்க தான் எந்தப் பக்கம் பாய வேண்டும் என்ற ரகசியக் குறிப்புகளைத் தனது குடிநீர் பாட்டிலில் பிக்ஃபோர்ட் எழுதி ஒட்டி வைத்திருந்தார்.

போட்டி முடிந்த அவசரத்தில் கோல் கீப்பர் பிக்ஃபோர்ட் தனது தண்ணீர் பாட்டிலை மைதானத்திலேயே மறந்து விட்டுச் சென்றார். அதன் பிறகு அங்கு வந்த அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி உள்ளிட்ட வீரர்கள் அந்தப் பாட்டிலைக் கையில் எடுத்துப் பார்த்த போது தான், தங்களை வீழ்த்த இங்கிலாந்து கீப்பர் தீட்டிய வியூகத்தைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.

ஆட்டம் பெனால்டி வரை செல்லாமல் வழக்கமான நேரத்திலேயே முடிந்ததால் பிக்ஃபோர்ட்டின் இந்தத் தண்ணீர் பாட்டில் ரகசியம் பலன் தராமல் போனாலும், சமூக வலைத்தளங்களில் இந்த விபரமான புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.