FIFA WC: அதிர்ச்சித் தோல்வி; கண்ணீருடன் விடைபெற்றார் நெய்மர்... சர்வதேசக் கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வு!

 

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நார்வே அணியிடம் பிரேசில் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் கால்பந்து ஜாம்பவானான நெய்மர் சர்வதேசக் கால்பந்து போட்டிகளில் இருந்து கண்ணீருடன் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தி வரும் இந்த உலகக்கோப்பைத் தொடரின் விறுவிறுப்பான நாக்-அவுட் சுற்றில் நேற்று பிரேசில் - நார்வே அணிகள் மோதின. ஹாலந்தின் இரட்டை கோல்: விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதியின் 79 மற்றும் 90-வது நிமிடங்களில் நார்வேயின் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலந்து அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து நார்வே அணியை 2-0 என முன்னிலை பெறச் செய்தார்.

ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் பிரேசில் அணிக்குக் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திய நெய்மர், ஒரு கோல் அடித்து அசத்தினார். எனினும், ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் நார்வே வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. ஐந்து முறை உலகச் சாம்பியனான பிரேசில் தொடரிலிருந்து ஏமாற்றத்துடன் வெளியேறியது.

தோல்விக்குப் பிறகு மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுத நெய்மர், தனது 16 ஆண்டுகால சர்வதேசக் கால்பந்து பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக உருக்கமாக அறிவித்தார். "நான் எனது நாட்டிற்காக இறுதிவரை முயற்சித்தேன், தொடர்ந்து முயற்சித்துக்கொண்டேதான் இருந்தேன். ஆனால், இப்போது எல்லாம் முடிந்துவிட்டது. எனது சர்வதேசப் பயணத்தை நான் எங்குத் தொடங்கினேனோ, அங்கேயே தற்பொழுது நிறைவு செய்கிறேன்."

சர்வதேசக் கால்பந்து அரங்கில் பிரேசில் நாட்டின் முகவரியாகத் திகழ்ந்த நெய்மர், பல்வேறு வரலாற்றுச் சாதனைகளுடன் விடைபெற்றுள்ளார். பிரேசில் தேசிய அணிக்காக மொத்தம் 129 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள நெய்மர், 80 கோல்களை அடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் பிரேசில் கால்பந்து வரலாற்றிலேயே, அந்த நாட்டிற்காக சர்வதேசப் போட்டிகளில் 'அதிக கோல்கள் அடித்த வீரர்' என்ற மாபெரும் வரலாற்றுச் சாதனையுடன் அவர் தனது கால்பந்து சகாப்தத்தை நிறைவு செய்துள்ளார்.

நெய்மரின் இந்தத் திடீர் ஓய்வு அறிவிப்பு, பிரேசில் நாட்டு ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகக் கால்பந்து ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.