FIFA WC: "தோல்விக்குப் பொறுப்பேற்பு" - தென் கொரியப் பயிற்சியாளர் ராஜினாமா!

 

உலகக் கோப்பைக் கால்பந்து தொடரில் தென் கொரியத் தேசிய அணி முதல் சுற்றோடு வெளியேறி  ஏமாற்றமளித்ததைத் தொடர்ந்து, அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹாங் மியுங் போ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

நடப்பு உலகக் கோப்பைக் கால்பந்து தொடரின் லீக் சுற்றில் தென் கொரிய அணி மிகவும் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களம் இறங்கியது.  'ஏ' பிரிவில் இடம்பெற்றிருந்த தென் கொரிய அணி விளையாடிய 3 போட்டிகளில், வெறும் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று, மற்ற இரு போட்டிகளில் தோல்விகளைச் சந்தித்தது.

இதன் காரணமாகப் புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டு, அடுத்த சுற்றான நாக்-அவுட் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியது. தென் கொரியக் கால்பந்து வரலாற்றில் ஹாங் மியுங் போ மிக முக்கியப் புள்ளியாகக் கருதப்பட்டாலும், உலகக் கோப்பையில் இவருக்கு இது இரண்டாவது ஏமாற்றமாக அமைந்துள்ளது.

ஏற்கனவே கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையிலும் இவரது பயிற்சியின் கீழ் களம் கண்ட தென் கொரிய அணி முதல் சுற்றோடு வெளியேறி சரிவைச் சந்தித்தது. அதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இரண்டாவது முறையாக தென் கொரிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இவர் மீண்டும் பொறுப்பேற்றார்.

ஆனால், நடப்பு உலகக் கோப்பையிலும் அணியைத் தகுதி பெறச் செய்ய முடியாமல் போனதால், ரசிகர்களின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானார். அணியின் இந்த மோசமான தோல்விக்கு முழுப் பொறுப்பேற்பதாகத் தெரிவித்துள்ள ஹாங் மியுங் போ, தனது பயிற்சியாளர் பதவியை துறந்துள்ளார். உலகக் கோப்பையின் நடுவே தென் கொரியப் பயிற்சியாளர் விலகியிருப்பது சர்வதேசக் கால்பந்து ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.