FIFA WC: இறுதிப்போட்டியில் நுழையப் போவது யாரு? இன்று முதல் அரையிறுதியில் பிரான்ஸ் - ஸ்பெயின் பலப்பரீட்சை!
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் 23-வது ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. உலகக் கோப்பையின் மகுடத்தைச் சூடப்போகும் இறுதிப்போட்டிக்குச் செல்லும் முதல் அணியைத் தீர்மானிக்கும் முதலாவது அரையிறுதி ஆட்டம் இன்று நள்ளிரவு அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் அரங்கேறுகிறது. இதில் உலக கால்பந்து அரங்கின் இரு வல்லரசுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த விறுவிறுப்பான முதல் அரையிறுதி ஆட்டம் அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் உள்ள மைதானத்தில், இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12:30 மணிக்கு தொடங்குகிறது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் தோல்வியே சந்திக்காமல் ஆதிக்கம் செலுத்தி வரும் இரு அணிகளும் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறத் தங்களது முழு பலத்தையும் பிரயோகிக்கக் காத்திருக்கின்றன.
ஏற்கனவே 2 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணி, இந்தத் தொடரிலும் தங்களது ஆட்டத் திறனை வெளிப்படுத்தி வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த மொராக்கோ அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான கிலியன் எம்பாப்பே தலைமையிலான உலகத்தரம் வாய்ந்த தாக்குதல் ஆட்டம் அந்த அணியின் பெரும் பலமாகப் பார்க்கப்படுகிறது.
மறுபுறம், கடந்த 2010-ம் ஆண்டின் உலக சாம்பியனான ஸ்பெயின் அணி, நடப்பு தொடரில் எவராலும் உடைக்க முடியாத மிக உறுதியான தடுப்பாட்ட உத்தியைக் கையாண்டு வருகிறது. காலிறுதி ஆட்டத்தில் பலத்த சவாலளித்த பெல்ஜியம் அணியை வீழ்த்தி கடைசி நான்கு கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. இளம் புயல் லாமின் யமால், நடுகள ஆட்டக்காரர்களான டேனி ஒல்மோ மற்றும் ரோட்ரி ஆகியோர் அணியின் தூண்களாக விளங்குகின்றனர்.
சர்வதேச கால்பந்து வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை 38 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஸ்பெயின் அணி 18 போட்டிகளில் வெற்றி பெற்றுத் தனி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பிரான்ஸ் அணி 13 போட்டிகளில் வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், மீதமுள்ள 7 ஆட்டங்கள் சமனில் முடிவடைந்துள்ளன.
ஒட்டுமொத்த புள்ளிவிபரங்களில் ஸ்பெயின் அணி முன்னிலை வகிப்பதோடு மட்டுமல்லாமல், இவ்விரு அணிகளும் அண்மையில் நேருக்கு நேர் மோதிய கடந்த இரண்டு போட்டிகளிலும் ஸ்பெயினே வெற்றி பெற்றுள்ளது பிரான்ஸ் அணிக்குச் கூடுதல் சவாலாக அமையலாம்.
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக உலகக் கோப்பையின் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் என்பதால், ஆட்டத்தின் முதல் நிமிடம் முதலே விறுவிறுப்பிற்கும் ஆக்ரோஷத்திற்கும் பஞ்சம் இருக்காது. கால்பந்து உலகின் மாபெரும் இரு துருவங்கள் மோதும் இந்த நள்ளிரவு ஆட்டத்தைக் காண உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.