FIFA : இன்று தொடங்குகிறது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா... மெக்சிகோவில் கோலாகலம் - களத்தில் கலக்க தயாராகும் மெஸ்சி, ரொனால்டோ, எம்பாப்பே!
உலகில் உள்ள ஒட்டுமொத்த விளையாட்டு ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த கால்பந்து விளையாட்டின் மிக உயரிய திருவிழாவான 23-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி, மெக்சிகோ நாட்டில் உள்ள மெக்சிகோ சிட்டியில் இன்று மிக பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது.
1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வரும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடர், உலகப் போர் காரணமாக இடையில் 2 முறை மட்டும் நடத்த முடியாமல் போனது. இதுவரை 22 உலகக்கோப்பை தொடர்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், கடைசியாக 2022-ம் ஆண்டு கத்தாரில் அரங்கேறிய உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணி பிரான்சை வீழ்த்தி உலக சாம்பியன் மகுடத்தைச் சூடியது குறிப்பிடத்தக்கது.
தற்போது தொடங்கவுள்ள இந்த 23-வது உலகக்கோப்பை தொடரை அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்துகின்றன. கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றிலேயே மிக அதிகப்படியாக 48 நாட்டைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கும் முதல் உலகத் தொடர் இதுதான் என்பதால், உலகெங்கும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த 48 அணிகளும் மொத்தம் 12 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகளும், 3-வது இடத்தைப் பெறும் சிறந்த 8 அணிகளும் என மொத்தம் 32 அணிகள் அடுத்த சுற்றுக்கு (நாக்-அவுட்) தகுதி பெறும்.
அங்கிருந்து 16 அணிகள் அடுத்த சுற்றையும் (ரவுண்ட் 16), பின்னர் கால்இறுதி, அரைஇறுதி எனப் போட்டிகள் நீண்டு, இறுதியாக ஜூலை 19-ந்தேதி நியூஜெர்சியில் உள்ள புகழ்பெற்ற மெட்லைப் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி நடத்தப்பட்டு சாம்பியன் யார் என்பது தீர்மானிக்கப்படும். சர்வதேச கால்பந்து தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பிரான்ஸ், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, 2-ம் நிலை அணியான ஸ்பெயின், இங்கிலாந்து, போர்ச்சுகல் உள்ளிட்ட அணிகள் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பில் முன்னணியில் இருக்கின்றன. உலகக் கோப்பையை அதிகபட்சமாக 5 முறை வென்ற பெருமைக்குரிய பிரேசில் அணியும் இம்முறை தீவிர முனைப்பில் உள்ளது. அதே நேரத்தில், 4 முறை சாம்பியனான இத்தாலி அணி தொடர்ந்து 3-வது முறையாக உலகக்கோப்பை போட்டிக்குத் தகுதி பெறாமல் போனது ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றமே.
இந்த உலகக்கோப்பை சீசனில் கிலியன் எம்பாப்பே, டெம்பிளே (பிரான்ஸ்), யாமின்யமால் (ஸ்பெயின்), லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), கிறிஸ்டியானோ ரொனால்டோ, விட்டின்யா (போர்ச்சுகல்), ஹாரி கேன், ஜூட் பெல்லிங்ஹாம் (இங்கிலாந்து), வினிசியஸ் ஜூனியர், நெய்மார் (பிரேசில்), எர்லிங்ஹாலன்ட் (நார்வே) உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற நட்சத்திர வீரர்களின் கால்கள் காட்டும் வித்தையைக் காண உலகமே ஆவலுடன் காத்துக் கிடக்கிறது.
தொடக்க நாளான இன்று 'ஏ' பிரிவில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. மெக்சிகோ சிட்டியில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்குத் தொடங்கும் முதல் ஆட்டத்தில், போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான மெக்சிகோவும், தென்ஆப்பிரிக்காவும் நேருக்கு நேர் மோதுகின்றன. உலக தரவரிசையில் 15-வது இடம் வகிக்கும் மெக்சிகோ அணி, ரால் ஜிமினெஸ், கில்பெர்ட்டோ மோரா, ஒபெட் வர்காஸ், கோல் கீப்பர் குல்லர்மோ ஒச்சாவ் போன்ற சிறந்த வீரர்களுடன் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவோடு வெற்றியுடன் கணக்கைத் தொடங்கக் காத்திருக்கிறது.
மறுபுறம், தரவரிசையில் 60-வது இடம் வகிக்கும் ரோன்வென் வில்லியம்ஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா அணி 4-வது முறையாக உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளது. இதுவரை லீக் சுற்றைத் தாண்டாத அந்த அணி, அடுத்த சுற்றுக்கு முன்னேற இன்றைய ஆட்டத்தில் குறைந்தது 'டிரா' வாவது செய்ய வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது. இவ்விரு அணிகளும் சர்வதேச போட்டிகளில் இதற்கு முன்பு 4 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளதில் 2-ல் மெக்சிகோவும், ஒன்றில் தென்ஆப்பிரிக்காவும் வென்றுள்ளன; மற்றொரு ஆட்டம் டிரா ஆனது. இதே பிரிவில் இந்திய நேரப்படி நாளை காலை 7.30 மணிக்கு நடக்கும் மற்றொரு விறுவிறுப்பான ஆட்டத்தில் தென்கொரியா - செக்குடியரசு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.