மெஸ்ஸி, எம்பாப்பே சாதனைகளை முறியடித்த ஹாலண்ட்... 60 சர்வதேச கோல்கள் அடித்து உலக சாதனை!

 

நார்வே நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் எர்லிங் ஹாலண்ட் சர்வதேச போட்டிகளில் மிக வேகமாகக் கோல்களை அடித்து புதிய உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். அமெரிக்காவின் டெக்ஸாஸ் அர்லிங்டனில் உள்ள டல்லாஸ் கால்பந்து திடலில் நேற்றிரவு நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் நார்வே மற்றும் ஐவரிகோஸ்ட் ஆகிய அணிகள் நேருக்கு நேர் மோதின. இந்த ஆட்டத்தில் 2-1 என்ற கோல்கள் கணக்கில் நார்வே அணி த்ரில் வெற்றியைப் பெற்று தங்களின் முதல் நாக் அவுட் வெற்றியைப் பதிவு செய்தது.

allowfullscreen

இந்தப் போட்டியின் 86 ஆவது நிமிடத்தில் நார்வே அணியின் முக்கிய வீரரான எர்லிங் ஹாலண்ட் அதிரடியாக ஒரு சூப்பரான கோல் அடித்து அசத்தினார். இந்த கோலுடன் சேர்த்து அவர் இந்த உலகக் கோப்பை தொடரில் மட்டும் மொத்தம் 5 கோல்களை அடித்துத் தனது திறமையை நிரூபித்துள்ளார். மேலும் சர்வதேச கால்பந்து போட்டிகளில் மிகக் குறைந்த ஆட்டங்களில் விளையாடி 60 கோல்களை நிறைவு செய்த உலகின் முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

முன்னதாக ஃபெரெங்க் புஸ்காஸ் 63 போட்டிகளில் 60 கோல்களை அடித்ததே கால்பந்து வரலாற்றில் சாதனையாக முதலிடத்தில் இருந்தது. ஆனால் எர்லிங் ஹாலண்ட் வெறும் 53 போட்டிகளிலேயே 60 கோல்களை அடித்து அந்தப் பழைய சாதனையை முழுமையாக முறியடித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற முன்னணி வீரர்களான கிளியன் எம்பாப்பே 101 போட்டிகளிலும், லியோனல் மெஸ்ஸி 122 போட்டிகளிலும், கிறிஸ்டியானோ ரொனால்டோ 130 போட்டிகளிலும் விளையாடியே இந்த 60 கோல்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.