தினமும் சண்டை... மாமியாரை செங்கலால் அடித்தேக் கொன்ற மருமகள்!
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டம் முகிலினா கிராமத்தைச் சேர்ந்த ஹர்தீப் சிங் என்பவரின் மனைவி பிரஜோத் கவுர் (27) என்பவருக்கும், அவரது மாமியார் நிர்மலா கவுருக்கும் இடையே குடும்பப் பிரச்சினை காரணமாக வீட்டில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாகக் கடந்த 14-ம் தேதி ஹர்தீப் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் வீட்டில் மாமியாரும் மருமகளும் மட்டுமே தனியாக இருந்துள்ளனர்.
கணவன் இல்லாத நேரத்தில் மாமியாருக்கும், மருமகள் பிரஜோத் கவுருக்கும் இடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மருமகள், வீட்டில் கிடந்த செங்கலை எடுத்துத் தனது மாமியார் நிர்மலா கவுரின் தலையில் அடுத்தடுத்து பலமாகத் தாக்கியுள்ளார். இதில் நிர்மலா கவுர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ஹர்தீப் சிங், தனது தாயார் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இச்சம்பவம் குறித்து உடனடியாக அந்தப் பகுதி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாமியாரைக் கொடூரமாகக் கொலை செய்த மருமகள் பிரஜோத் கவுரை வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.