இன்று 6 மாநிலங்களவை எம்.பி., பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் தொடக்கம்!
தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தல் அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று பிப்ரவரி 26ம் தேதி தொடங்குகிறது.
சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் நடைபெறவுள்ள இந்தத் தேர்தல் செயல்முறையில் இன்று பிப்ரவரி 26ம் தேதி காலை 11 மணி முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள்: மார்ச் 5. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை: மார்ச் 6. மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 9ம் தேதி. தேவையெனில் வாக்குப் பதிவு மார்ச் 16ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். அதே போன்று வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் மார்ச் 16ம் தேதி மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும்.
வரும் ஏப்ரல் மாதத்துடன் தமிழகத்தைச் சேர்ந்த திருச்சி சிவா (திமுக), கனிமொழி சோமு (திமுக), என்.ஆர். இளங்கோ (திமுக), அந்தியூர் செல்வராஜ் (திமுக), தம்பிதுரை (அதிமுக), ஜி.கே. வாசன் (தமாகா) ஆகிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது.
இந்தத் தேர்தலை நடத்துவதற்குத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தின் கூடுதல் செயலாளர் சாந்தி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், இணைச் செயலாளர் தேன்மொழி உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில், இந்த 6 இடங்களில் பெரும்பாலான இடங்களைத் திமுக கூட்டணி கைப்பற்ற வாய்ப்புள்ளது. இருப்பினும், சட்டமன்றத் தேர்தலுக்கு முந்தைய இந்த மாநிலங்களவைத் தேர்தல் அரசியல் கட்சிகளிடையே முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.