சுயதொழில் தொடங்கும் பெண்களுக்கு ₹50,000 நிதியுதவி - 'அன்னபூர்ணா' திட்டத்தின் சிறப்பம்சங்கள்!

 

உணவு சார்ந்த தொழில்களில் தடம் பதிக்க விரும்பும் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசின் வழிகாட்டுதலின் கீழ் ‘அன்னபூர்ணா’ கடன் உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பெண்கள் தங்களின் சுயதொழில் கனவை நனவாக்க முடியும்.

உணவு வணிகத்திற்குத் தேவையான சமையல் உபகரணங்கள், பாத்திரங்கள், குளிர்சாதனப் பெட்டி மற்றும் இதர ஆரம்பக்கட்ட உள்கட்டமைப்புகளை வாங்குவதற்குக் அதிகபட்சமாக ₹50,000 வரை இத்திட்டத்தின் கீழ் கடனாகப் பெறலாம். பெண்கள் எளிதாகத் தொழில் தொடங்க வேண்டும் என்ற நோக்கில், சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மிகவும் குறைவான வட்டி விகிதமே இதற்கு வசூலிக்கப்படுகிறது. பெற்றுக்கொண்ட கடன் தொகையைத் திரும்பச் செலுத்த 36 மாதங்கள் (3 ஆண்டுகள்) வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது.

கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டு தொழில் தொடங்கும் ஆரம்பக் கட்டத்தில் பெண்களுக்குப் பொருளாதாரச் சுமை இருக்கக்கூடாது என்பதற்காக, முதல் மாதத்திற்கான இஎம்ஐ தவணை செலுத்தத் தேவையில்லை என்ற சலுகையும் இதில் உள்ளது. 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட பெண் தொழில்முனைவோர் இத்திட்டத்திற்குத் தகுதியானவர்கள்.

தனிநபர் உணவகம், ஹோம் கேட்டரிங், டிஃபன் சென்டர் அல்லது பேக்கிங் உணவுத் தயாரிப்பு போன்ற உணவு சார்ந்த சுயதொழிலைத் தொடங்க விரும்புபவராகவோ அல்லது ஏற்கனவே நடத்தி வருபவராகவோ இருக்க வேண்டும்.

தகுதியுடைய பெண்கள் தங்களின் சுயதொழில் திட்ட அறிக்கை, அடையாள அட்டை (ஆதார், பான் கார்டு), முகவரிச் சான்று மற்றும் வாங்க உத்தேசித்துள்ள உபகரணங்களின் விலைப்பட்டியல் ஆகிய ஆவணங்களுடன் தங்களுக்கு அருகிலுள்ள பாரத ஸ்டேட் வங்கி அல்லது பிற பொதுத்துறை வங்கி கிளைகளை அணுகி இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துப் பயனடையலாம்.