அடுத்தடுத்து இரு அடுக்குமாடி குடியிருப்புகளில் தீ விபத்து!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பல்வேறு வட மாநிலங்களில் இருந்து பலரும் இங்கு தங்கி வேலை பார்த்து வருகின்றனர். நொய்டாவின் செக்டார் 74 பகுதியில் உள்ள ஐவி கவுண்டி என்ற 28 மாடிக் குடியிருப்பில் இன்று காலை 8 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இதனால் வானத்தில் அடர்த்தியான கருப்புப் புகை சூழ்ந்த நிலையில், தகவல் அறிந்ததும் தீயணைப்பு வாகனங்கள் அங்கு வரவழைக்கப்பட்டு பல மணி நேர போராட்டத்தின் பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதனிடையே இந்த தீ விபத்து ஏற்பட்ட அடுத்த 15 நிமிடங்களில், நொய்டாவின் செக்டார் 52இல் உள்ள மற்றொரு அடுக்குமாடி கட்டிடத்திலும் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அந்த கட்டிடத்தின் தரை தளத்தில் உணவகமும், அதன் மேல் தளத்தில் மாணவர்கள் தங்கும் விடுதியும் செயல்பட்டு வருகிறது. தீவிபத்து ஏற்பட்ட தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், அங்கு தங்கியிருந்தவர்களைப் பாதுகாப்பாக மீட்டதோடு தீயையும் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த அடுத்தடுத்த தீ விபத்துகளால் நொய்டா நகரின் குடியிருப்புப் பகுதிகளில் பெரும் பரபரப்பும் அச்சமும் நிலவியது. மின் கசிவு காரணமாக இந்த விபத்துகள் ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த இரு சம்பவங்களிலும் யாருக்கும் பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.