பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் தீ விபத்து.. புகையால் மக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல்!
வடசென்னை பகுதியான தண்டையார்பேட்டையில் அமைந்துள்ள பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் சுத்திகரிப்பு வளாகத்தில் இன்று மாலை திடீரென ஒதீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து விண்ணை முட்டி எழும்பும் அடர்ந்த வெண்புகை காரணமாக ஒட்டுமொத்த தண்டையார்பேட்டை பகுதியும் தற்போது அடர்ந்த புகைமண்டலமாகக் காட்சியளிக்கிறது. நச்சுப் புகையின் தாக்கம் காரணமாகச் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்குக் கடுமையான மூச்சுத்திணறலும் கண் எரிச்சலும் ஏற்பட்டுள்ளதால் அங்கு அவசர நிலை நிலவி வருகிறது.
தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் முக்கியப் பிரிவில் இன்று மாலை 4 மணியளவில் திடீரெனத் தீப்பற்றிக் கொண்டது. பெட்ரோலியப் பொருட்கள் என்பதால் தீ பரவி, ஆலை வளாகம் முழுவதும் கரும்புகையும் வெண்புகையும் எழும்பத் தொடங்கின. ஆலைக்கு வெளியே பல கிலோமீட்டர் தூரத்திற்கு இந்தப் புகைமண்டலம் சூழ்ந்துள்ளதால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் கூடத் தெரியாமல் சாலையறியாமல் திணறியபடி தங்களின் வாகனங்களை இயக்கி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தீ விபத்து நேர்ந்த பகுதியிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையின் வீரியம் காரணமாகப் பொதுமக்கள் கடுமையான உபாதைகளுக்கு உள்ளாகியுள்ளனர்:
தண்டையார்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குத் திடீரெனக் கடுமையான கண் எரிச்சல், தொண்டை வறட்சி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் தங்களின் வீடுகளின் கதவு மற்றும் ஜன்னல்களை பாதுகாப்பாக இருக்குமாறும், வெளியே வரும் போது ஈரத்துணிகளால் முகத்தை மூடிக் கொள்ளுமாறும் சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தகவலறிந்ததும் வடசென்னை பகுதியிலுள்ள பல்வேறு நிலையங்களிலிருந்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மின் மோட்டார்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளன. இரசாயனப் கலவைகளைப் பயன்படுத்தித் தீயணைப்பு வீரர்கள் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்று வருகின்றனர்.