மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே சென்ட்ரல் திரையரங்கில் பயங்கர தீ விபத்து!
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மேற்கு கோபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ள மிகவும் பழமையான சென்ட்ரல் திரையரங்க வளாகத்தில் திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
செப்டம்பர் 17ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோவில் திருக்குடமுழுக்கு நடைபெற உள்ள நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மீனாட்சி அம்மன் கோவிலின் மேற்கு கோபுரம் செல்லும் வழியில் உள்ள இந்தப் பழமையான திரையரங்கம் தற்போது செயல்படாத நிலையில் மூடப்பட்டுள்ளது. இருப்பினும், இதன் வளாகத்தில் உள்ள ஒரு பகுதியில் வணிக நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான குடோன் இயங்கி வந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மீது தீ பரவியுள்ளது. மின்கசிவு காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரியார் பேருந்து நிலையப் பகுதி தீயணைப்புத் துறையினர் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பாதுகாப்பு நடவடிக்கையாக டவுன், திருப்பரங்குன்றம், அனுப்பானடி உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட தீயணைப்பு வாகனங்கள் கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை எனத் தீயணைப்புத் துறை தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.