தேங்காய் எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து - பல கோடி மதிப்பிலான பொருட்கள் சாம்பல்!
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே இயங்கி வரும் புகழ்பெற்ற தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள் மற்றும் பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.
கோழிக்கோடு மாவட்டம் பேப்பூர் அருகே உள்ள 'வெஸ்ட் மாகி' பகுதியில் அமைந்துள்ள தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலையிலேயே இத்தீ விபத்து நேரிட்டுள்ளது. ஆலையில் தேங்காய் எண்ணெய் தயாரிப்பிற்காகப் பெருமளவில் கொப்பரை தேங்காய்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. ஆலையின் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ, எளிதில் தீப்பற்றக்கூடிய கொப்பரை மற்றும் எண்ணெய்யில் பட்டு அடுத்த சில நிமிடங்களிலேயே ஆலை முழுவதும் வானுயரக் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோழிக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து பல மணி நேரம் கடுமையாகப் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இத்தீவிபத்தில் ஆலையில் பொருத்தப்பட்டிருந்த அதிநவீன எண்ணெய் உற்பத்தி எந்திரங்கள், பல டன் கொப்பரை தேங்காய்கள் மற்றும் பேரல்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்த சமையல் தேங்காய் எண்ணெய் ஆகியவை முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
விபத்து நேரிட்ட சமயத்தில் ஆலையின் உட்பகுதியில் ஊழியர்கள் யாரும் பணியில் இல்லாததால் நல்வாய்ப்பாகப் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. மின் கசிவு காரணமாக ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.