தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து; 2 நோயாளிகள் பலி - பீகாரில் கொடூரம்!

 

டெல்லி தங்கும் விடுதி தீ விபத்தின் சோகம் மறைவதற்குள், பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு வழக்கம் போல நோயாளிகள் சிகிச்சையில் இருந்துள்ளனர். அப்போது, மருத்துவமனையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் எதிர்பாராத விதமாகத் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

கட்டடத்தில் இருந்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் காரணமாக, அடுத்த சில நிமிடங்களிலேயே தீ ஆக்ரோஷமாக மற்ற பகுதிகளுக்கும் வேகமாகப் பரவத் தொடங்கியது. இதனால் மருத்துவமனை வளாகம் முழுவதும் அடர்ந்த நச்சுப் புகை சூழ்ந்தது.

தீ பரவியதை அடுத்து, வார்டுகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். உடனடியாகச் செயல்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் உள்ளூர் மக்கள், அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த நோயாளிகளையும், பணியாளர்களையும் அவசர அவசரமாகக் கட்டடத்தை விட்டு வெளியேற்றினர்.

இருப்பினும், தீயின் பிடியிலும் அடர்ந்த புகையிலும் சிக்கி நகல முடியாமல் போன 2 நோயாளிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்குப் பல வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கட்டடத்திற்குள் பரவிய தீயை மேலும் பரவ விடாமல் தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

மருத்துவமனையிலிருந்து மீட்கப்பட்ட பிற நோயாளிகள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மற்ற மருத்துவமனைகளுக்கு அவசர அவசரமாக மாற்றப்பட்டு வருகின்றனர். தற்போதும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், புகையினால் பாதிக்கப்பட்ட சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்துப் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.