பள்ளியில் பயங்கர தீ விபத்து; காங்கோவில் 26 மாணவ-மாணவியர் உயிரிழப்பு!
மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 26 மாணவ-மாணவியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காங்கோவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு கிவு மாகாணம் புகாவு நகரில் சிம்பண்டா பகுதியில் அமைந்துள்ள பள்ளியில்தான் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்நாட்டில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த வியாழக்கிழமை காலை 9 மணியளவில் வழக்கம்போல் மாணவ-மாணவியர் கல்வி பயின்று கொண்டிருந்த போது பள்ளியில் எதிர்பாராதவிதமாகப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திடீரெனப் பரவிய தீயில் மாணவ-மாணவியர் வகுப்பறைகளுக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்து மாணவர்களை மீட்டனர். இருப்பினும், இந்த விபத்தில் சிக்கி 19 மாணவிகள் மற்றும் 4 மாணவர்கள் உள்பட மொத்தம் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கான உண்மையான காரணம் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.