அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!
தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், சிகிச்சை பலனின்றி மேலும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து, பலியானோரின் மொத்த எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத்தில் அமைந்துள்ள 'ரிம்ஸ்' அரசு மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏசியில் ஏற்பட்ட திடீர் மின்கசிவு காரணமாகப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தின்போது வார்டு முழுவதும் அடர்ந்த புகை பரவியதால் ஏற்பட்ட கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக குழந்தைகள் பாதிக்கப்பட்டன. ஆரம்பத்தில் சில குழந்தைகள் உயிரிழந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி மேலும் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.
விபத்து நடந்த பச்சிளம் குழந்தைகள் பிரிவில் மீட்கப்பட்ட எஞ்சிய குழந்தைகள் அனைவரும் பாதுகாப்பான முறையில் பல்வேறு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு, தீவிர மருத்துவக் கண்காணிப்பில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.