சென்னை பள்ளிக்கரணையில் வாகன நிறுத்துமிடத்தில் பயங்கர தீ விபத்து... புகைமூட்டத்தால் பொதுமக்கள் அவதி!

 

சென்னை பள்ளிக்கரணை பகுதியில், பல்வேறு வழக்குகள் மற்றும் விதிமீறல்கள் தொடர்பாகக் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் முனையத்தில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பள்ளிக்கரணையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான திறந்தவெளி வாகன நிறுத்துமிடத்தில் தான் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் திடலில் காவல்துறையினரால் பல்வேறு குற்ற வழக்குகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் கார்கள் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போது ஏற்பட்டுள்ள தீயினால், அங்கிருந்த பல வாகனங்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறி எரிந்து சாம்பலாகி வருவதாகத் தெரிகிறது.

விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும், பள்ளிக்கரணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். தற்போது தீ மேலும் பரவாமல் தடுப்பதற்கான அவசரக்கால மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தற்போது நிலவி வரும் கடுமையான கோடை வெயிலின் காரணமாக, வாகனங்களில் இருந்த எஞ்சின்களிலிருந்து எரிபொருள் கசிந்து  தீப்பற்றியதா அல்லது அருகில் உள்ள புதர்களில் ஏற்பட்ட காய்ந்த சருகுகளின் தீ பரவியதா என்ற கோணத்தில் பள்ளிக்கரணை போலீசார் தற்பொழுது தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.