கத்தார் தீ விபத்து.. உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்திற்குத் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் - முதல்வர் விஜய் அறிவிப்பு!
மேற்காசிய நாடான கத்தாரில் உள்ள முக்கிய எரிவாயு சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி, தமிழகத்தைச் சேர்ந்த 3 தொழிலாளர்கள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் விஜய், விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்குப் பொருளாதார ரீதியாக உதவும் வகையில் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார்.
கத்தாரின் புகழ்பெற்ற 'ராஸ் லப்பான்' தொழிற்பேட்டையில், 'பர்சான்' என்ற பிரம்மாண்ட எரிவாயு உற்பத்தி மையம் அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக நிலவி வந்த பிராந்திய மோதல்கள் காரணமாக, இந்த ஆலையின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது நிலைமை சீரானதைத் தொடர்ந்து, ஆலையை மீண்டும் இயக்குவதற்கான ஆரம்பகட்டப் பணிகள் அண்மையில் தொடங்கின. அதன்படி, பணியாளர்கள் தங்களது வேலைகளைத் தொடங்கிய போது, எதிர்பாராத விதமாக ஆலையின் ஒரு பகுதியில் கடுமையான தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தீ ஆலை முழுவதும் வேகமாகப் பரவியதில், அங்குப் பணியில் இருந்த இந்தியர்கள் உட்பட 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 66-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்து அங்குள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த 12 இந்தியர்களில் ராதாபுரம் தாலுகா, யாக்கோபுரம் கிராமத்தைச் சேர்ந்த பபித் (26), பணகுடி அருகே உள்ள சிவகாமிபுரத்தைச் சேர்ந்த சஜித் குமார் (25), மங்கம்மாள் சாலை பகுதியைச் சேர்ந்த சுவின் (26) ஆகிய 3 பேர் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சஜித் குமார் கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதம் தான் வேலைக்காகக் கத்தார் சென்றுள்ளார் என்பதும், விபத்து நடப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு தான் தனது தாயாரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார் என்பதும் உறவினர்களிடையே பெரும் கண்ணீரை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.10 லட்சம் நிதியுதவி உடனடியாக வழங்கப்படும் எனத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதே வேளையில், தங்களது பிள்ளைகளின் உடல்களைத் தாயகம் கொண்டு வர வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று, உடல்களை விரைந்து தமிழகம் கொண்டு வர மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் மூலம் தமிழக அரசு தீவிரமான தூதரக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாட்டில் வேலைக்குச் சென்ற இடத்தில் மூன்று இளம் தமிழர்கள் உயிரிழந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.