டெல்லி - மும்பை விரைவுச்சாலையில் தீப்பற்றி எரிந்த பேருந்து - 7 பேர் உடல் கருகி பலி; 22 பேர் படுகாயம்!

 

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் இருந்து மத்தியப் பிரதேசம் இந்தூருக்கு தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டம் கொல்வா எல்லைக்குட்பட்ட தனவ்தா அருகே டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் அதிகாலை 3.15 மணியளவில் நகர்ந்து கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் மிக வேகமாக மோதியது.

மோதிய அடுத்த சில வினாடிகளில் பேருந்தில் தீப்பிடித்து எரிந்து மளமளவெனப் பரவியது. அதிகாலை நேரம் என்பதால் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் ஆழந்த உறக்கத்தில் இருந்தனர். மோதிய வேகத்தில் மேல் படுக்கையில் இருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டதால் அவர்களால் உடனடியாகப் பேருந்தில் இருந்து வெளியேற முடியவில்லை. இதனால் பேருந்துக்குள் சிக்கிய 5 பயணிகள் சம்பவ இடத்திலேயே கொடூரமாக உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே மேலும் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகத் தௌசா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பியூஷ் தீட்சித் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்தத் துயரச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது