undefined

2026ன் முதல் சந்திர கிரகணம்.. என்னவெல்லாம் செய்யக் கூடாது? வெறும் கண்களால் பார்க்கலாமா?!

 

இன்று மார்ச் 3ம் தேதி 2026 ஆண்டின் முதல் முழுச் சந்திர கிரகணம் நிகழ உள்ளது. அறிவியல் ரீதியாக இது ஒரு நிழல் விளையாட்டு என்றாலும், ஆன்மிக ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் இதற்குப் பல்வேறு முக்கியத்துவங்கள் அளிக்கப்படுகின்றன. இன்று மாலை 3:20 மணி முதல் 6:47 மணி வரை நிகழவுள்ள இந்தச் சந்திர கிரகணத்தின் போது நாம் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விரிவாகக் காண்போம்.

பூமி, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதே சந்திர கிரகணம். இந்த முறை சந்திரன் அடர் ஆரஞ்சு நிறத்தில் 'பிளட் மூன்' ஆகத் காட்சியளிக்கப் போகிறது. இந்திய நேரப்படி மாலை 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை கிரகணம் நீடிக்கும். வடகிழக்கு மாநிலங்களில் முழுமையாகவும், சென்னை, டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் கிரகணத்தின் இறுதிப் பகுதியையும் காணலாம்.

கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை

கிரகண காலத்தை இறை வழிபாட்டிற்கு உகந்த நேரமாகக் கருதுவது மரபு. வீட்டில் சமைத்து வைத்திருக்கும் உணவுகள் மற்றும் குடிநீரில் தர்ப்பைப் புல்லினைப் போட்டு வைக்க வேண்டும். இது கதிர்வீச்சுகளிலிருந்து உணவைப் பாதுகாப்பதாகக் கருதப்படுகிறது.

கிரகண நேரத்தில் வீட்டில் இருந்தபடியே நவக்கிரகத் துதி, சந்திர பகவான் துதி அல்லது உங்களுக்குப் பிடித்த இறைப் பாடல்களைப் பாராயணம் செய்வது மிகுந்த நற்பலன்களைத் தரும்.

கிரகணம் முடிந்த பிறகு ஏழைகளுக்கு அரிசி, பால் அல்லது பருப்பு வகைகளைத் தானமாக வழங்குவது தோஷங்களை நீக்கும்.

கிரகணம் முடிந்ததும் முன்னோர்களுக்குத் (பித்ருக்கள்) தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமானது.

கிரகணம் முழுமையாக முடிந்த பிறகு (இரவு 6:47-க்கு மேல்) குளித்துவிட்டு, அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வது சிறப்பு.

செய்யக் கூடாதவை

கிரகணத்தின் போது சில செயல்களைத் தவிர்ப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது என அறிவுறுத்தப்படுகிறது.

கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே உணவருந்திவிட வேண்டும். கிரகண காலத்தில் எதையும் உட்கொள்ளக் கூடாது.

கர்ப்பிணிப் பெண்கள் கிரகண நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். கூர்மையான ஊசி அல்லது கத்தரிக்கோல் போன்ற பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

கிரகண காலத்தில் தீய சக்திகளின் தாக்கம் இருக்கும் எனக் கருதப்படுவதால், தமிழகத்தின் பெரும்பாலான கோயில்கள் இன்று நடை சார்த்தப்பட்டிருக்கும். எனவே, மாலை நேரத்தில் கோயில் செல்வதைத் தவிர்க்கவும்.

கிரகண நேரத்தில் தூங்குவதைத் தவிர்த்து, விழிப்புடன் இருந்து இறைத் தியானத்தில் ஈடுபடுவது நல்லது.

வெறும் கண்ணால் பார்க்கலாமா?

சூரிய கிரகணத்தைப் போலன்றி, சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்ப்பது முற்றிலும் பாதுகாப்பானது. இதற்காக எந்தவிதப் பிரத்யேகக் கண்ணாடிகளும் தேவையில்லை. இருப்பினும், 'பிளட் மூன்' அழகைத் தெளிவாகக் காணத் தொலைநோக்கிகளை பயன்படுத்தலாம்.