முதலாவதாக 'தமிழ்த்தாய் வாழ்த்து' கட்டாயம் - புதிய அரசாணை வெளியீடு!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதலாவதாகத் 'தமிழ்த்தாய் வாழ்த்து' கட்டாயம் பாடப்பட வேண்டும் என வலியுறுத்தித் தமிழ்நாடு அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் விழாக்களில் நிகழ்வு தொடங்குவதற்கு முன் 'தமிழ்த்தாய் வாழ்த்து' முதன்முதலாகப் பாடப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் தொடர்ந்து இந்த அரசாணை அதிகாரப்பூர்வமாகப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மனோன்மணியம் சுந்தரனார் அவர்களால் 1891-இல் எழுதப்பட்ட "மனோன்மணீயம்" என்ற புகழ்பெற்ற நாடக நூலின் பாயிரத்தில் இருந்தே "நீராரும் கடலுடுத்த..." எனத் தொடங்கும் இந்தப் பாடல் பெறப்பட்டது.
1970 நவம்பர் 23 முதல் தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ விழாக்களில் ஆரம்பப் பாடலாக இது பாடப்பட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டு நடைமுறைக்கு வந்தது. 2021 டிசம்பர் 17 அன்று தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ மாநிலப் பாடலாக அறிவிக்கப்பட்டது.
1970-களில் இருந்தே அரசு விழாக்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது ஒரு பண்பாட்டு மரபாகப் பின்பற்றப்பட்டு வரும் நிலையில், தற்போது அது மேலும் வலுப்படுத்தப்பட்டு அரசாணையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.