தஞ்சையில் கோர விபத்து: கடலில் மீன்பிடித்தபோது இடி தாக்கி மீனவர் பலி! வலையில் சிக்கிய நிலையில் உடல் மீட்பு!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஏரிப்புறகரை பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர், எதிர்பாராத விதமாக இடி தாக்கி உயிரிழந்தார். கோடை மழையின் போது நிகழ்ந்த இந்தத் துயரம் அந்த கிராமத்தையே நிலைகுலையச் செய்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், ஏரிப்புறகரை ஊராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து. மீன்பிடித் தொழிலாளியான இவர், வழக்கம் போல நேற்று அதிகாலை 5:30 மணியளவில் மீன் பிடிப்பதற்காக (ஊன் வலை) கடலுக்குச் சென்றுள்ளார். காலை 6 மணியளவில் அந்தப் பகுதியில் திடீரெனக் கோடை மழை பெய்யத் தொடங்கியது. அப்போது பயங்கர சத்தத்துடன் மின்னல் வெட்டி, இடி இடித்தது. நீண்ட நேரமாகியும் மீன்பிடிக்கச் சென்ற காளிமுத்து கரை திரும்பாததால், அச்சமடைந்த உறவினர்கள் அவரைத் தேடிச் சென்றுள்ளனர்.
உறவினர்கள் தேடிச் சென்ற போது, காளிமுத்து கடலில் இடி தாக்கிய நிலையில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது உடல் மீன்பிடி வலையிலேயே சிக்கியிருந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிராம்பட்டினம் கடலோரக் காவல் படையினர், காளிமுத்துவின் உடலை மீட்டனர். அவரது உடல் உடற்கூறாய்விற்காக அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மீன்பிடிக்கச் சென்ற இடத்தில் மின்னல் தாக்கித் தொழிலாளி உயிரிழந்தது, ஏரிப்புறகரை மற்றும் அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரப் பகுதி மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.