விசைப்படகில் விஷவாயு கசிந்து மீனவர் பலி; 3 பேர் ஐசியுவில் அனுமதி!
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில், ஆழ்கடலில் மீன்பிடித்துவிட்டுத் திரும்பிய விசைப்படகின் கழிவு மீன் சேமிப்பு அறையில் பரவிய நச்சு வாயுவைச் சுவாசித்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 மீனவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால்மேடு கிராமத்தைச் சேர்ந்த விஜயேந்திரன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், கடந்த ஜூலை 22-ஆம் தேதி காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். மீன்பிடிப் பணியை முடித்துக்கொண்டு நேற்றைய தினம் படகு காரைக்கால் துறைமுகத்திற்குப் பாதுகாப்பாக வந்து சேர்ந்தது.
மீன்களைக் கரைக்கு இறக்கும் பணியின் போது, படகின் அடிப்பகுதியில் நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த கழிவு மீன் சேமிப்பு அறைக்குள் காரைக்கால்மேடைச் சேர்ந்த முத்துவேல் என்பவர் முதலில் இறங்கியுள்ளார். அங்கிருந்த கழிவு மீன்களிலிருந்து வெளியான அடர்ந்த நச்சு வாயுவைச் சுவாசித்த நொடியிலேயே அவர் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தார்.
முத்துவேலை மீட்கும் அவசரத்துடன் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த கதிரவன், அபினேஷ் மற்றும் அருண் ஆகிய 3 மீனவர்களும் அடுத்தடுத்து அந்த அறைக்குள் இறங்கியுள்ளனர். இருப்பினும், நச்சு வாயுவின் வீரியம் தாங்காமல் மூவரும் நிலைகுலைந்து உள்ளேயே மயங்கினர். படகில் இருந்த மற்ற மீனவர்களின் அலறல் சத்தம் கேட்டு, துறைமுகத்தில் இருந்த தொழிலாளர்களும் பொதுமக்களும் உடனடியாக விரைந்து வந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தொட்டிக்குள் மயங்கிக் கிடந்த 4 பேரையும் பெரும் போராட்டத்திற்குப் பின் வெளியே மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் பரிசோதித்த அவசரப் பிரிவு மருத்துவர்கள், வழியிலேயே மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் கதிரவன் பரிதாபமாக உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட முத்துவேல், அபினேஷ் மற்றும் அருண் ஆகிய மூவருக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) செயற்கை சுவாசக் கருவிகளுடன் அவசரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.