தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொடூரத் தாக்குதல்... ரத்த வெள்ளத்தில் 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!
தமிழக சட்டமன்றத் தேர்தல் பரபரப்பு ஒருபுறம் இருக்க, மறுபுறம் நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தங்களது கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர். வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 4 மீனவர்களைச் சுற்றி வளைத்துத் தாக்கியதோடு, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வலைகளையும் சேதப்படுத்தி விரட்டியடித்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வாணவன் மகாதேவி கிராமத்தைச் சேர்ந்த குமார் (36) என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில், கதிர்வேல், முருகபாண்டி, ராஜ் ஆகிய 4 மீனவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று அதிகாலை கோடியக்கரைக்குத் தென்கிழக்கே 10 கடல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் படகை வழிமறித்துள்ளனர்.
மீனவர்களைப் படகிற்குள் இறங்க விடாமல் தடுத்ததோடு, கட்டை மற்றும் இரும்பு கம்பிகளால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் 4 மீனவர்களும் படுகாயமடைந்தனர். மேலும், அவர்கள் வைத்திருந்த ரூ. 1 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகளை அறுத்து கடலில் வீசி சேதப்படுத்தியதோடு, மீனவர்களைக் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து விரட்டியுள்ளனர்.