நெகிழ்ச்சி... வளர்ப்பு நாய்க்கு கோலாகலமாக நடந்த வளைகாப்பு நிகழ்ச்சி!

 

கரூர் மாவட்டம் சோமூர் பகுதியில், தாங்கள் செல்லமாக வளர்த்து வரும் நாய்க்கு வளைகாப்பு நடத்தி, உறவினர்களுக்கு விருந்தளித்துச் சீராட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் சோமூரைச் சேர்ந்த கோமதி என்பவரது குடும்பத்தினர், 'சாரா' என்ற 'சிட்சு' வகை நாயை மிகவும் ஆசையாக வளர்த்து வருகின்றனர். கர்ப்பமாக இருக்கும் சாராவுக்கு ஆகஸ்ட் 15 முதல் 20-ஆம் தேதிக்குள் குட்டிகள் பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மனிதர்களுக்குச் செய்வது போலவே, தட்டுகளில் பழங்கள், பூக்கள், பிஸ்கட், மிக்சர் மற்றும் நாய்களுக்கான பிரத்யேக உணவுகளைச் சீர்வரிசையாக வைத்துள்ளனர்.

உறவினர்கள் முன்னிலையில், சாராவுக்குத் திலகமிட்டுத் தாம்பூலச் சீர்வரிசைகளுடன் பாரம்பரிய முறைப்படி வளைகாப்புச் சடங்கு கோலாகலமாக நடத்தப்பட்டது. இச்சிறப்பு நிகழ்வில் பங்கேற்ற 20-க்கும் மேற்பட்ட உறவினர்களுக்குக் குடும்பத்தினர் சுவையான விருந்தளித்து மகிழ்ந்தனர்.

செல்லப்பிராணியைத் தங்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினராகப் பாவித்து நடத்தப்பட்ட இந்த பாசமிக்க வளைகாப்பு நிகழ்வு சோமூர் பகுதியில் நெகிழ்ச்சியான உரையாடலாக மாறியுள்ளது.