நெகிழ்ச்சி... ரமலான் நோன்பு இருப்பவர்களுக்கு 40 ஆண்டுகளாக உணவு வழங்கும் இந்துக்கள்!
தமிழகத்தில் மத நல்லிணக்கத்திற்குச் சான்றாக விளங்கும் நெகிழ்ச்சியான சமப்வம் கடந்த 40 ஆண்டுகளாக ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே அரங்கேறி வருகிறது. இங்கு கடந்த 40 ஆண்டுகளாக இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்து கடைபிடித்து வரும் இந்தச் சகோதரத்துவம் தமிழகம் முழுவதுமே எதிரொலிகிறது.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே காரங்காடு கிராமத்தில், இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் காலத்தில், இந்துக்கள் நோன்பு கஞ்சி வழங்குவதையும், நோன்பு திறப்பவர்களுக்கு உணவு அளிப்பதையும் ஒரு கடமையாகவே செய்து வருகின்றனர். இந்த நெகிழ்ச்சியான வழக்கம் இன்று நேற்று தொடங்கியதல்ல; கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இக்கிராமத்தில் தடையின்றித் தொடர்ந்து வருகிறது.
இக்கிராமத்தில் உள்ள இந்துப் பெருமக்கள் ஒன்றிணைந்து, தங்களது இஸ்லாமியச் சகோதரர்கள் ரமலான் நோன்பு நோற்பதை ஊக்கப்படுத்தும் விதமாகத் தங்களால் இயன்ற உணவுகளை வழங்கத் தொடங்கினர். மாலை வேளையில் நோன்பு திறக்கும் நேரத்தில், இந்துக்கள் தங்கள் இல்லங்களில் இருந்து பழங்கள், இனிப்புகள் மற்றும் நோன்பு கஞ்சி போன்றவற்றை மசூதிக்குக் கொண்டு சென்று வழங்குகின்றனர். காரங்காடு கிராமத்தில் வசிக்கும் மக்கள் ஜாதி, மத வேறுபாடுகளைக் கடந்து ஒரு தாய் மக்களாக வாழ்ந்து வருகின்றனர்.
இஸ்லாமியர்களின் ரமலான் மற்றும் பக்ரீத் பண்டிகைகளில் இந்துக்களும், இந்துக்களின் தீபாவளி மற்றும் பொங்கல் திருநாட்களில் இஸ்லாமியர்களும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளையும் இனிப்புகளையும் பகிர்ந்து கொள்கின்றனர். ஊர் நன்மைக்காக நடைபெறும் பொதுவான காரியங்களில் இரு மதத்தினரும் இணைந்து முடிவெடுப்பதும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதும் இந்தப் பகுதியின் தனிச்சிறப்பாகும்.
இன்றைய சூழலில் மதங்களுக்கு இடையே பிரிவினையைத் தூண்டும் சக்திகள் பெருகி வரும் வேளையில், காரங்காடு கிராம மக்களின் இந்தச் செயல் ஒட்டுமொத்த தமிழகத்திற்கே ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது. "மனிதாபிமானம் மதங்களை விட மேலானது" என்பதை இக்கிராம மக்கள் ஒவ்வொரு ஆண்டும் நிரூபித்து வருகின்றனர்.