நெகிழ்ச்சி... சென்னை ஐஐடியில் ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய் - மகன்!
"கற்றலுக்கு வயது ஒரு தடையல்ல" என்பதைத் தங்களது அசாத்திய உழைப்பால் உலகிற்கு நிரூபித்துக் காட்டியுள்ளனர் ஒரு தாயும் மகனும். சென்னை ஐஐடி-யின் புகழ்பெற்ற பட்டமளிப்பு விழா மேடையில், 45 வயது மதிக்கத்தக்க பேராசிரியைத் தாயும், அவரது 21 வயது மகனும் ஒன்றாக ஒரே படிப்பில் பட்டம் பெற்றுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலம் பரூச் பகுதியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேராசிரியையாகப் பணியாற்றி வருபவர் ஜிகிஷா டெய்லர் (45). இவரது மகன் ஆதித்யா கபாடியா (21). சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பெருந்தொற்று பரவிய காலத்தில், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் ஆன்லைன் வழிப் படிப்புகளுக்கு மாறின. அந்தச் சமயத்தில் சென்னை ஐஐடி நிறுவனம், ஆன்லைன் மூலமாகக் பயிலக்கூடிய புதிய நான்கு ஆண்டு கால பி.எஸ் டேட்டா சயின்ஸ் இளங்கலைப் படிப்பை அறிமுகப்படுத்தியது. இதில் ஜிகிஷாவின் மகன் ஆதித்யா கபாடியா முதலில் சேர்ந்தார்.
இந்த ஆன்லைன் படிப்பிற்கு ஐஐடி நிர்வாகம் முறையான 4 ஆண்டு காலக் கல்லூரிப் பட்டச்சான்றிதழ் வழங்கும் என அறிவித்ததால், புதிய தொழில்நுட்பத்தைக் கற்க விரும்பிய தாய் ஜிகிஷாவும் அதே படிப்பில் மாணவியாக இணைந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு பேராசிரியைப் பணியில் இருந்து மீண்டும் ஒரு சாதாரண மாணவியாக மாறியது ஜிகிஷாவிற்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை:
"ஆரம்பத்தில் கணிதமும், புள்ளியியலும் எனக்கு மிகவும் கடினமாக இருந்தன. ஆனால், கடுமையான ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தேன். தினமும் அதிகாலை 4:30 மணிக்கே எழுந்து காலை 7:00 மணி வரை படிப்பேன். அதன் பின்னர் வழக்கமான வீட்டு வேலைகளையும், கல்லூரிப் பேராசிரியைப் பணியையும் கவனித்துவிட்டு, மதியத்திற்கு மேல் மீண்டும் படிப்பில் கவனம் செலுத்துவேன்." என்கிறார் ஜிகிஷா.
தாயும் மகனும் சக மாணவர்களுடன் இணைந்து ஆன்லைன் மூலம் ஒரு குழுவாக அமைத்துப் படித்து வந்துள்ளனர். இந்த நான்கு ஆண்டுப் பயணம் தங்களது குடும்ப உறவை மேலும் நெருக்கமாக்கியதாக மகன் ஆதித்யா கபாடியா பெருமிதத்துடன் கூறுகிறார்:
"அம்மா எவ்வளவு கடினமாக உழைத்துப் படிக்கிறார் என்பதைப் பார்த்து நானும் பெரிதும் ஊக்கமடைந்தேன். எப்போதும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டே இருக்கும் என் அம்மாவின் ஒரு புதிய முகத்தை நான் இந்த 4 ஆண்டுகளில் பார்த்தேன்," என ஆதித்யா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.