நெகிழ்ச்சி... விமான நிலையத்தில் மாரடைபால் சரிந்த பயணி! சிபிஆர் சிகிச்சையளித்து காப்பாற்றிய சிஐஎஸ்எப் அதிகாரி!

 

மணிப்பூர் மாநிலம் இம்பால் விமான நிலையத்தில், டெல்லி செல்லவிருந்த பயணி ஒருவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், பாதுகாப்புப் படை அதிகாரியின் உடனடிச் செயல்பாட்டால் அவர் மறுபிறவி எடுத்துள்ளார்.

இம்பாலில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணிப்பதற்காக சுரேஷ் குமார் என்ற பயணி விமான நிலையம் வந்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவருக்குத் தீவிர மாரடைப்பு ஏற்பட்டு, அங்கேயே மயங்கிச் சரிந்து விழுந்தார். அவரது சுவாசம் நின்று, உடல் இயக்கமற்ற நிலைக்குச் சென்றது.

அங்கிருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் பிகேந்திரா, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து நொடிப்பொழுதில் களமிறங்கினார். மருத்துவக் குழுவினர் வருவதற்கு முன்பாகவே, சுரேஷ் குமாருக்குத் தேவையான அவசரக் கால முதலுதவிகளை பிகேந்திரா வழங்கினார்.

அதே விமானத்தில் பயணிக்க வந்த சி.ஆர்.பி.எப். மருத்துவப் பணியாளரான கிரண் என்பவரும் உடனடியாக இணைந்து முறையான சிகிச்சைகளை மேற்கொண்டார். இவர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால், சில நிமிடங்களில் சுரேஷ் குமாருக்குச் சுயநினைவு திரும்பியது.

இதனைத் தொடர்ந்து, விமான நிலைய ஆம்புலன்ஸ் மூலம் அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தற்போது சுரேஷ் குமாரின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தக்க சமயத்தில் செயல்பட்டு ஒரு உயிரைக் காப்பாற்றிய ஆய்வாளர் பிகேந்திராவிற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மறுபுறம், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29-ம் தேதி மெகா பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் சி.ஐ.எஸ்.எப்., டெல்லி போலீஸ், என்.எஸ்.ஜி., மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து இந்தப் பயிற்சியை மேற்கொண்டனர். மோப்ப நாய் பிரிவினர் மற்றும் மருத்துவக் குழுவினரும் இதில் பங்கேற்று, அவசரக் காலங்களில் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது குறித்து ஒத்திகை பார்த்தனர்.