நெகிழ்ச்சி.. விவாகரத்தாகி 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணைந்த பிரியதர்ஷன் - லிஸி தம்பதி.. குவியும் வாழ்த்துக்கள்!!

 

கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்ற இந்தத் தம்பதியினர், தற்போது மீண்டும் ஒன்றாக வாழத் தொடங்கியுள்ளதை இயக்குநர் பிரியதர்ஷன் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

1990-ல் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இவர்கள், சில கருத்து வேறுபாடுகள் காரணமாக 2016 செப்டம்பரில் பிரிந்தனர். கடந்த ஜனவரி மாதம் இயக்குநர் சிபி மலையிலின் மகன் திருமணத்தில் இருவரும் ஒன்றாகக் கலந்துகொண்டபோதே, இவர்கள் மீண்டும் இணையப் போவதாகத் தகவல்கள் கசிந்தன. மார்ச் 16 அன்று லிஸி வெளியிட்ட புகைப்படம் ஒன்றில், நடிகர் மம்மூட்டியுடன் இருவரும் இருப்பதைப் பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். சென்னையில் டப்பிங் பணியில் இருந்த பிரியதர்ஷனைச் சந்திக்க லிஸியுடன் வருமாறு மம்மூட்டியே அழைப்பு விடுத்து, அவர்களை வாழ்த்தியுள்ளார்.

இந்த இணைப்பில் இவர்களது பிள்ளைகளான நடிகை கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் சித்தார்த் பிரியதர்ஷன் ஆகியோர் முக்கியப் பங்காற்றியுள்ளனர். குடும்பத்தின் அமைதி மற்றும் மகிழ்ச்சிக்காகத் தம்பதியினர் கடந்த 6 முதல் 8 மாதங்களுக்கு முன்பே இந்த முடிவை எடுத்துள்ளனர். மறுமணம் செய்து கொள்வார்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரியதர்ஷன், "தற்போது திருமணச் சான்றிதழைத் தவிர, நாங்கள் இருவரும் ஒரு தம்பதியாக அதே வாழ்க்கையைத் தான் வாழ்ந்து வருகிறோம். எங்களைப் பொறுத்தவரை திருமணம் என்பது வெறும் சான்றிதழ் மட்டுமே; நட்பு, தோழமை மற்றும் அன்புதான் மிக முக்கியம்."

இவர்கள் இருவரும் சட்டப்பூர்வமாக மீண்டும் திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தில் இல்லை என்றும், ஒருவருக்கொருவர் துணையாக இருந்து மீதி வாழ்க்கையைக் கழிக்க முடிவெடுத்துள்ளதாகவும் அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.