நெகிழ்ச்சி.. மகளின் முதல் பள்ளி நாளை சிறப்பிக்க ரூ.3.4 கோடி சொகுசு காரைப் பள்ளிப் பேருந்து போல மாற்றிய தந்தை!

 

துபாயில் தனது செல்ல மகள் முதல் நாள் பள்ளிக்கூடத்திற்குச் செல்வதை மறக்க முடியாததாக மாற்ற, தந்தை ஒருவர் தனது பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரைப் பள்ளிப் பேருந்து போல உருமாற்றியுள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

துபாயில் வசித்து வரும் தங்க வியாபாரி ஒருவர், தனது மகள் தஹப் (அரபியில் தங்கம் என்று பொருள்) மீது வைத்துள்ள அதீத பாசத்தால், அவளது முதல் பள்ளி நாளைச் சிறப்பிக்க விநோதமான யோசனையைச் செயல்படுத்துயுள்ளார்.

தனது 3.4 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை, மகளுக்குப் பிடித்தார்போல் மாற்றியமைக்க அவர் முடிவு செய்தார். அதன்படி, காரின் மீது மஞ்சள் நிற பெயிண்ட் அடிக்கப்பட்டு, மேற்கூரையில் ராட்சத பென்சில்கள் மற்றும் ஸ்கேல் வடிவமைப்பு பொருத்தப்பட்டது.

காரின் பக்கவாட்டில் நோட்டுப் புத்தகங்கள் மற்றும் வரைபட உபகரணங்களின் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டதோடு, மகளின் பெயரான 'தஹப்' என்பதும் தெளிவாகப் பொறிக்கப்பட்டது.

இந்தக் காரில் சிறுமி பள்ளிக்கூடத்திற்குச் சென்ற புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து பலரும் தந்தையின் பாசத்தைப் பாராட்டி வருகின்றனர். அதேசமயம், "இவ்வளவு விலைமதிப்ப்குள்ள சொகுசு காருக்கு வந்த சோதனையைப் பார்த்தால், இதற்குப் பதிலாக ஒரு சாதாரண வாகனத்தையே மாற்றியிருக்கலாமே" என்றும், "நாளைக்குக் கல்லூரி போகும்போது ஹெலிகாப்டரை இப்படி மாற்றுவாரோ?" என்றும் நெட்டிசன்கள் கிண்டலாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.