நெகிழ்ச்சி... கணவனை 180 கி.மீ தோளில் சுமந்து சென்று சிவனை தரிசிக்க வைத்த மனைவி!
அன்பு மற்றும் பக்தியின் பேராற்றலை உணர்த்தும் வகையில், மாற்றுத்திறனாளியான தனது கணவரை 180 கிலோமீட்டர் தூரம் தோளில் சுமந்து சென்று சிவபெருமான் தரிசனம் பெற வைத்துள்ளார் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர். உத்தரப் பிரதேச மாநிலம் மோடிநகர் அருகே உள்ள பக்ராவா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சச்சின் - ஆஷா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சச்சின் சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கொடூரமான விபத்தொன்றில் சிக்கி, முதுகுத்தண்டு அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆஷா தன் குடும்பத்தை ஒற்ற ஆளாகப் போராடிப் பராமரித்து வந்தார்.
சச்சின் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு தொடர்ந்து 13 முறைகளுக்கு மேல் ஹரித்வாருக்குக் கால்நடையாகவே சென்று கங்கை நீர் எடுத்து வந்த தீவிர சிவபக்தர் ஆவார். மீண்டும் ஹரித்வாரில் உள்ள சிவபெருமானை தரிசித்து, புனித கங்கை நீரால் அபிஷேகம் செய்ய வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் ஆசையாக இருந்தது. கணவனின் ஆசையை நிறைவேற்ற உறுதியெடுத்த ஆஷா, சச்சினைத் தனது தோள்களிலேயே சுமந்து கொண்டு நடைப்பயணத்தைத் தொடங்கினார்.
உத்தரப் பிரதேசத்திலிருந்து உத்தரகாண்டில் உள்ள ஹரித்வார் வரை சுமார் 180 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்தப் பயணத்தில், இவர்களது குழந்தைகளும் இணைந்து நடந்து வந்தனர். வழியெங்கும் இப்பெண்ணின் இணையற்ற பாசத்தையும் மன உறுதியையும் கண்டு வியந்த பொதுமக்கள், அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கி வழியனுப்பி வைத்தனர். தற்போது இந்தத் தம்பதியினரின் நெகிழ்ச்சியான வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி, மக்களின் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றன.