சீட் பெல்ட் அணிய மறுத்து அடம்பிடித்த குழந்தையால் விமான சேவை ரத்து - பயணிகள் அவதி!

 

கனடாவில் குழந்தை ஒன்று சீட் பெல்ட் அணிய மறுத்து அடம் பிடித்ததால், புறப்படத் தயாராக இருந்த விமானத்தின் சேவை ரத்து செய்யப்பட்ட விசித்திர சம்பவம் நடந்துள்ளது.

கனடாவின் விக்டோரியா சர்வதேச விமான நிலையத்திலிருந்து டொராண்டோ நகரை நோக்கிப் புறப்படுவதற்காகச் 'சார்ட்டர் ஏர்லைன்ஸ்'  விமானம் தயாராக நின்று கொண்டிருந்தது. விமானம் ஓடுபாதைக்குச் செல்லவிருந்த நிலையில், காரில் பயணித்த ஒரு சிறு குழந்தை தனது இருக்கையில் அமரவும், 'சீட் பெல்ட்' அணியவும் பிடிவாதமாக மறுத்து அடம் பிடித்துள்ளது. குழந்தையின் பெற்றோரும், விமானப் பணிப்பெண்களும் எவ்வளவோ முயன்றும் அக்குழந்தையை இருக்கையில் அமரவைத்து சீட் பெல்ட் அணிய வைக்க முடியவில்லை.

விமானப் பாதுகாப்பு விதிகளின்படி பயணி சீட் பெல்ட் அணியாமல் விமானத்தைப் இயக்க முடியாது என்பதால், விமானம் மீண்டும் முனையத்திற்கே திருப்பப்பட்டது. அக்குழந்தையையும் அவரது பெற்றோரையும் உடைமைகளுடன் கீழே இறக்கி முடிக்க நள்ளிரவு 12:30 மணி ஆகிவிட்டது. விக்டோரியா விமான நிலையத்தில் நள்ளிரவுக்கு மேல் ஓடுபாதை பராமரிப்புக்காக மூடப்படும் என்பதால், அந்த விமானப் பயணம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது.

இதனால் மற்ற பயணிகள் அனைவரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அவர்களுக்கு மறுநாளுக்கான மாற்று விமானச் சீட்டுகள் வழங்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவத்திற்காகச் சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் பயணிகளிடம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுக்கொண்டது.