புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தில் கோளாறு! குலுங்கிய கேபின்... அலறிய பயணிகள்!

 

 

ஈரானில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே போயிங் 737 விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் அதிர்ச்சியில் அலறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானம் கடுமையாக அதிர்ந்ததில் கேபினின் உட்புற மேற்கூரை பகுதிகள் பெயர்ந்து விழுந்ததுடன், மேலே வைக்கப்பட்டிருந்த பயணிகளின் உடைமைகளும் கீழே விழுந்தன.

 செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம் ஈரானின் மஷாத் நகரில் இருந்து கெர்மன்ஷா நோக்கி புறப்பட்டது.புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தின் ஒரு டயர் பிரிந்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து விமானத்தில் என்ஜின் தொடர்பான தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டு, விமானம் கடுமையாக அதிர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 விமானம் கடுமையாக குலுங்கியதால் கேபினின் உட்புற மேற்கூரை பகுதிகள் பெயர்ந்து கீழே விழுந்தன. மேலும், மேல்புறத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டிகள் திறந்து, அதிலிருந்த பைகள் மற்றும் பொருட்களும் பயணிகள் மீது விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் விமானத்திற்குள் பயணிகள் அச்சத்தில் அலறினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.

 தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானத்தை மீண்டும் மஷாத் விமான நிலையத்துக்கு திருப்பி, அவசரமாக தரையிறக்க விமானி முடிவு செய்தார்.விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும், பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பகட்ட தகவலின்படி இந்த சம்பவத்தில் உயிரிழப்போ, காயங்களோ பதிவாகவில்லை. தொழில்நுட்ப கோளாறுக்கான சரியான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.