109 மாடி கட்டிடத்தில் மோதிய விமானம்... பரபரப்பு வீடியோ!
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள மத்திய தொழில் மாவட்டத்தில் 109 மாடிகளைக் கொண்ட பிரம்மாண்ட வணிகக் கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. அலுவலகங்கள் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்கள் பலவும் செயல்பட்டு வரும் இந்தக் கட்டிடம், பீஜிங்கில் உள்ள மிக உயரமான கட்டிடங்களில் ஒன்றாகும். நேற்று இந்தக் கட்டிடத்தில் ஊழியர்கள் வழக்கம்போல் தங்களது பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையில் எதிர்பாராத நிகழ்வு ஒன்று அரங்கேறியது.
வானில் பறந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்று திடீரென இந்த அடுக்குமாடி கட்டிடத்தின் மீது நேராக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் பயங்கர தாக்கத்தால் அந்த வணிகக் கட்டிடத்தின் கண்ணாடிகள் உடைந்து சிதறின. மேலும் மோதிய அந்த சிறிய ரக விமானம் கட்டிடத்தின் ஒரு பகுதிக்குள் புகுந்தவாறே நின்றதால் அங்கிருந்த மக்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.
விபத்து குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனர். விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த அசம்பாவிதம் எப்படி நடந்தது என்பது குறித்தும், விமானம் மோதியதற்கான காரணம் குறித்தும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.