பயிற்சி விமானம் வயலில் விழுந்து நொறுங்கியது... பெண் விமானி படுகாயம்!

 

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள கியாம்பூர்–பஹேரியா பகுதியில் நேற்று ஒரு பயங்கர விமான விபத்து நிகழ்ந்துள்ளது. அந்தப் பகுதியில் உள்ள கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த ஒரு நெடுஞ்சாலை அருகே பறந்து கொண்டிருந்த சிறிய ரகப் பயிற்சி விமானம் ஒன்று திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. விபத்தின் போது வேகமாகக் கீழிறங்கிய அந்த விமானம், அங்கிருந்த உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் பலமாக மோதி அருகிலிருந்த வயலில் விழுந்து நொறுங்கியது.

விமானம் கீழே விழுந்த பயங்கர சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் அனைவரும் அந்த இடத்தில் திரண்டனர். இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பெண் விமானி மகாராஷ்டிராவைச் சேர்ந்த காதர் கானின் மகள் கைனாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை மீட்ட காவல் துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த மின்சாரத் துறை அதிகாரிகள் விபத்தால் அறுந்து விழுந்த உயர் அழுத்த மின்கம்பிகளைச் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என முதற்கட்டமாகச் சந்தேகிக்கப்படுகிறது. விபத்து நடந்த பகுதியைச் சுற்றிப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்தச் விபத்துக்கான அசல் காரணத்தைக் கண்டறியச் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.