புறப்படும் போது ரன்வேயில் திடீரென வெடித்த விமான டயர்கள்... பரபரப்பு வீடியோ !

 

 

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோவில் உள்ள ஓஹேர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வடக்கு கரோலினாவின் சார்லோட் நகருக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 ரக ஜம்போ விமானம் புறப்படத் தயாரானது. இந்த விமானத்தில் 172 பயணிகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட சிப்பந்திகள் இடம்பெற்றிருந்தனர். மதியம் 2 மணியளவில் விமானம் புறப்படுவதற்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து சிக்னல் கிடைத்ததைத் தொடர்ந்து ஓடுதளத்தில் அந்த விமானம் நகர்ந்து சென்று கொண்டிருந்தது.

allowfullscreen

அப்போது விமானத்தின் வலதுபுறம் இருந்த இரண்டு டயர்களும் திடீரென வெடித்துச் சிதறியதால் புகை கிளம்பியதுடன் விமானமும் குலுங்கியது. பின்னால் வந்த மற்றொரு விமானி இதைக் கவனித்து உடனடியாகக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்ததால் விமானம் வானில் பறப்பதற்கு முன்பே தடுத்து நிறுத்தப்பட்டது. விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் விமானத்தில் பற்றிய தீயை அணைத்தனர்.

பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுப் பேருந்துகள் மூலம் முனையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். பின்னர் பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலம் தங்களது ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடந்த இரண்டு வாரங்களில் சிகாகோ விமான நிலையங்களில் நடக்கும் ஐந்தாவது டயர் வெடிப்பு சம்பவம் இதுவாகும்.