சாலையில் மழைநீர் வெள்ளம்...  பாதாள சாக்கடைக்குள் விழுந்து முதியவர் பலி!

 

மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்பொழுது பெய்து வரும் கடுமையான கனமழையால் பல்வேறு இடங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் நகரின் முக்கியச் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் மும்பையின் சகினகா பகுதியில் உள்ள கைரானி சாலையில், பாதாளச் சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.

அப்போது அங்குள்ள ஒரு பாதாளச் சாக்கடையின் மூடி அகற்றப்பட்டு, எவ்விதப் பாதுகாப்பு எச்சரிக்கையுமின்றித் திறந்த நிலையில் ஆபத்தாகக் காணப்பட்டுள்ளது. அந்தச் சமயத்தில் யாதவ் நகர் பகுதியைச் சேர்ந்த 55 வயது முதியவரான அஸ்லாம் ஈசக் ஷேக் என்பவர், மழைநீர் சூழ்ந்த அந்தச் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாகத் திறந்திருந்த அந்தப் பாதாள சாக்கடையைத் கவனிக்கத் தவறிய முதியவர், நிலைதடுமாறி அதற்குள் விழுந்து தண்ணீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் சுமார் 4 மணி நேரம் தீவிரமாகப் போராடி முதியவரின் உடலைச் சடலமாக மீட்டனர். இந்தத் துயரமான சம்பவத்தில் உரியப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் அலட்சியமாகச் செயல்பட்டதாக 4 மாநகராட்சி ஊழியர்கள் தற்பொழுது அதிரடியாகச் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், உயிரிழந்த முதியவரின் குடும்பத்தினருக்குத் தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என மும்பை மாநகராட்சி அதிகாரிகள் முறைப்படி அறிவித்துள்ளனர்.